Last Updated : 15 Aug, 2018 01:44 PM

 

Published : 15 Aug 2018 01:44 PM
Last Updated : 15 Aug 2018 01:44 PM

50 கோடி மக்கள் பயன்பெறும் ‘ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம்’ செப்.25-ம் தேதி தொடக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு

நாட்டில் 50 கோடி மக்கள் ரூ..5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறும் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம் செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.

நாட்டின் 72-வது சுதந்திரதின விழா இன்று நாடுமுழவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். முப்படைகளின் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

அதன்பின் நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:

நாட்டில் உள்ள 10 ஏழை குடும்பங்கள், 50 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக்காப்பீடு பெறும் உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.

கடந்த 4 ஆண்டுகளாக எனது தலைமையிலான அரசு நாட்டில் உள்ள ஏழைகளின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகிறது. அவர்களுக்கு முழுமையான மருத்துக் காப்பீடு திட்டம் கிடைக்கும் வகையில், பண்டிட் தீனதயால் உபாத்யாயா பிறந்தநாளான செப்டம்பர் 25-ம் தேதி பிரதமர் ஜன் ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படும்.

பாஜக அரசு அறிமுகம் செய்ய இருக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம் உலகிலேயே மிகப்பெரிய காப்பீடு திட்டமாகும். இந்த திட்டத்தில் நாட்டில் உள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்கள், 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் ஆண்டு தோறும் மருத்துவக் காப்பீடு கிடைக்கும்.

இன்றில் இருந்து, அடுத்து 4 முதல் 5 வாரங்களுக்கு இந்தத் திட்டம் சோதனை முயற்சியாகத் தொடங்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால், அவர் மட்டும் பாதிக்கப்படவில்லை, ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்படுகிறது.

இதற்காகத்தான், ஏழை மக்களின் நலனுக்காக இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ஏழை மக்களுக்கும், சாமானிய மக்களுக்கும் நல்ல தரமான மருத்துவ சிகிச்சைகள், வசதிகள் கிடைக்கும், மிகப் பெரிய மருத்துவமனைகளில், தீவிர உடல்நலக்குறைபாட்டுக்கு இலவசமாகச் சிகிச்சை மேற் கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தின் நோக்கமே ஏழை மக்கள், உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் போது, சிகிச்சைக்காக யாரிடமும் பணத்துக்காக கையேந்தக் கூடாது. மேலும், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் போது, ஏராளமான இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் குறிப்பாக நடுத்தர மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய மருத்துவமனைகள் திறக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் நாட்டில் கிராமப்பகுதிகளில் உள்ள 8.03 கோடி மக்களும், நகர்ப்புறங்களில் உள்ள 2.33 கோடி குடும்பங்களும் பயன்பெறுவார்கள். ஒட்டுமொத்த அமெரிக்க, கனடா, மெக்சிக்கோ மக்கள் தொகைக்கும் கிடைக்கும் மருத்துவ சிகிச்சையின் அளவைப் போல் மிகப்பெரிய திட்டமாகும்.

ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்க வேண்டும், அவர்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்பதைத்தான் எனது அரசு கடந்த 4 ஆண்டுகளாகச் செய்து வருகிறது.

எந்த ஏழை மக்களும் வறுமையில் வாழ்வதை விரும்பவில்லை, வறுமையில் சாவதையும் விரும்பவில்லை.

சர்வதேச நிறுவனங்களின் ஆய்வறிக்கையில் கடந்த 2 ஆண்டுகளில் இந்திய ஏழைகளில் 5 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்த 22 மாநில அரசுகள் முன்வந்துள்ளனர். இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான முறைப்படியான பணியை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்து வருகிறது

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x