Published : 14 Aug 2018 10:36 AM
Last Updated : 14 Aug 2018 10:36 AM

‘டிவி’ நடிகை மூலம் விளக்கம் தெரிவித்து வீடியோ: ரபேல் விவகாரத்தில் காங்கிரஸூக்கு பாஜக பதிலடி

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் புகார் கூறி வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தி நடிகை மூலம் பாஜக விளக்கம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதே இதுதொடர்பாக பிரான்ஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஒரு போர் விமானத்தின் விலை ரூ.526 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய அரசு ஒரு போர் விமானத்தை ரூ.1,670 கோடி விலையில் வாங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது ரகசிய ஒப்பந்தம் என்பதால் விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு கூறி வருகிறது.

ரபேல் போர் விமானம் வாங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். காங்கிரஸூம் இந்த விவகாரத்தில் தொடர்ந்து பாஜக மீது புகார் கூறி வருகிறது. இதையடுத்து, ரபேல் ஒப்பந்தத்தில் நடந்தது பற்றி இந்தி டிவி நடிகை பல்லவி ஜோஷியை வைத்து விளக்கம் அளித்து, வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கி பல்லவி ஜோஷி பேசுகிறார்.

அதில், “10 ஆண்டுகளுக்கு முன் மலிவான விலையில் போர் விமானங்கள் வாங்குவதே ரபேல் ஒப்பந்தத்தின் நோக்கம். ஆனால் அவற்றின் தரத்தை பற்றி கவலையில்லை. தரமான, பாதுகாப்பான விமானங்கள் இப்போது வாங்கப்படுகின்றன. வீட்டுக்கு வாங்கும் பூட்டு தரமாக இருக்க வேண்டும் அல்லவா. இதுமட்டுமின்றி இதன் உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்பதால், இந்தியாவுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது” என பல்லவி ஜோஷி கூறுகிறார்.

உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போது, பாஜகவை கிண்டல் செய்யும் விதமாக ராகுல் காந்தி உருளைக்கிழங்கு தொழிற்சாலை என கூறினார். அதுபற்றியும் பல்லவி ஜோஷி விளக்கம் அளிக்கிறார். பாஜகவின் இந்த நடவடிக்கைகக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x