Last Updated : 11 Aug, 2018 08:17 AM

 

Published : 11 Aug 2018 08:17 AM
Last Updated : 11 Aug 2018 08:17 AM

காற்றில் ராகம் மீட்டும் வீணை கலைஞர் துரை சுவாமி- பெங்களூரு சாலைக்கு இன்று அவரது பெயர் சூட்டப்படுகிறது

ஒரு குளிர்கால மாலையில் தஞ்சா வூரில் இருந்து மைசூருவுக்கு மயிலாடுதுறை எக்ஸ்பிரஸில் பயணமானேன். சில நூற்றாண்டு களுக்கு முன் கும்பகோணம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மைசூர், மேல்கோட்டை, ஹாசன் ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்தோரின் வாரிசுகள் நிரம்பி இருந்தனர்.

ரயில் தடதடக்கும் சத்தத்திற்கு மத்தியில் கர்நாடக சங்கீத கச்சேரி யின் விமர்சன கூட்டம் தொடங்கி யது. அங்கிருந்த அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவ‌ர் மேனி சிலிர்த்தவாறு வீணை வித்வான் மைசூர் துரை சுவாமி ஐயங்காரை பற்றி சிலாகித்தார். அடுத்த கணமே யூ-டியூப்பில் துரை சுவாமி ஐயங்காரின் வீணை இசையில் மூழ்க தொடங்கினேன்.நடிகர் ரஜினி காந்த் நடித்த ஜானி படத்தில் இளையராஜா மீட்டிய வீணை யொலி ஏற்படுத்திய மயக்கத்தை துரை சுவாமி ஐயங்காரின் வீணை யும் செவ்வனே செய்தது.

இந்தியாவின் பாரம்பரிய இசை யிலும், கர்நாடக இசையிலும் பிரபல மான வீணை வித்வான் மைசூர் வி.துரை சுவாமி ஐயங்கார் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொட்ட‌கத்தாவல்லி கிராமத்தில் 1920-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி பிறந்தார். இவரது தாத்தா ஜனார்த்தனர் நல்ல பாடகராக இருந்ததாலும், தந்தை வெங்கடேசர் வீணை இசைக் கலைஞராக இருந்ததாலும் அதன் தாக்கம் துரை சுவாமியிடம் அதிகமாகவே இருந்தது.

தொடக்கத்தில் தன் தந்தை யிடம் வீணை இசை பயின்ற இவர், பிரபல வீணை வித்வான் வேங்கடகிரியப்பாவிடம் மாணவ ராக‌ சேர்ந்தார். மைசூரு மகாராஜா குடும்பத்தின் ஆஸ்தான இசை வித்வானாக இருந்த வேங்கட கிரியப்பாவிடம் சுமார் 15 ஆண்டு கள் வீணை இசை கற்றார்.

முத்தையா பாகவதர் பாடிய பல கீர்த்தனைகளையும் கற்று தேர்ந்த துரை சுவாமி தனது 12 வயதிலே கச்சேரி செய்ய தொடங்கினார். 13-வது வயதில் மைசூரை ஆண்ட நான்காம் கிருஷ்ணராஜ உடையார் முன்னிலையில் கச்சேரி செய்தார். இவரது இசையில் மகிழ்ந்த மகாராஜா துரை சுவாமிக்கு 50 வெள்ளி காசுகளை பரிசாக வழங்கி பாராட்டினார்.

பின்னர் மைசூர் அரண்மணை வாத்தியக் குழுவின் ஆஸ்தான வித்வானாகவும் நியமித்தார்.

பெரும்பாலான வீணை வித்வான் கள் கான்டாக்ட் மைக்ரோஃபோன் பயன்படுத்தி கச்சேரிகள் செய்த னர். ஆனால் துரை சுவாமி ஐயங் கார் பாரம்பரியமான வீணையில் இருந்து வெளிப்படும் இயல்பான ராகம் தான் சிறந்தது என்று கூறி, நவீன தொழில்நுட்ப கருவிகளை தவிர்த்தார். இதனால் இவரது வீணை இசைக்கு ‘’மைசூர் பாணி’’ என்ற புதிய பெயரே உருவானது. இந்த மைசூரு பாணியிலான‌ வீணை இசையில் மகாராஜா குடும்பத்தையும், விருந்தினர்களை யும் தொடர்ந்து 6 தலைமுறைகள் கட்டிப்போட்டார்.

அகில இந்திய வானொலி நிலையத்தில் கச்சேரி செய்ய தொடங்கிய இவர் அங்கு 25 ஆண்டுகள் இசை தயாரிப்பாளராக பதவி வகித்தார்.

1944-ல் துரை சுவாமி ஐயங்கார் சென்னையில் முதன்முதலாக பங்கேற்ற இசைக் கச்சேரியில் மணி ஐயர், சவுடையா, லால்குடி ஜெயராமன், எம்.எஸ்.கோபால கிருஷ்ணன், டி.என்.கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல இசைக்கலைஞர் கள் இவருடன் இணைந்து பக்க வாத்தியம் வாசித்துள்ளனர். உஸ்தாத் அலி அக்பர் கான், அம்ஜத் அலிகான் உள்ளிட்ட பிரபல கலை ஞர்களுடன் ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட நாடு களில் நடந்த சர்வதேச இசை விழாக்களில் வீணை மீட்டியுள்ளார்.

இசைத்துறையில் மைசூர் வி.துரை சுவாமி நிகழ்த்திய சாதனைக்காக மத்திய அரசின் பத்மபூஷண் விருது, சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது, சங்கீத கலாசிகா மணி விருது உள்ளிட்ட விருது களைப் பெற்றுள்ளார். மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இறுதிவரை இசைத் தொண்டாற்றி வந்த மைசூர் வி.துரைசுவாமி 1997-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி பெங்களூருவில் காலமானார்.

அவரது வீணை எழுப்பிய ஒலி காற்றில் கலந்து பிரபஞ்சமெங்கும் பரவியிருக்கிறது. இதனை அங்கீ கரிக்கும் வகையில் பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத் ராஜ், மல்லேஸ்வரத்தில் உள்ள 13-வது கிராஸ் சாலைக்கு மைசூர் வீணை வித்வான் வி. துரை சுவாமி ஐயங்கார் பெயரை சூட்ட உள்ளார். 98-வது பிறந்த தினமான இன்று நடைபெறும் விழாவில் ஸ்ரீ யாதகிரி நாராயண ராமானுஜ ஜீயர், அந்த தொகுதி எம்எல்ஏ அஷ்வத் நாராயணா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த அறிவிப்புக்கு துரை சுவாமி மகன், பிரபல வீணை வித்வான் டி. பாலகிருஷ்ணா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x