Published : 10 Aug 2018 06:26 PM
Last Updated : 10 Aug 2018 06:26 PM

மருந்து பக்கவிளைவு: 12 வயது சிறுமி பலி; மும்பை சேரிப்பகுதி குழந்தைகள் 197 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோவண்டி சேரிப்பகுதியிலிருந்து 197 குழந்தைகள் மருந்து பக்கவிளைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பாகி உள்ளது.

பிரிஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் குடற்புழு ஒழிப்பு மருத்துவ முகாமை ஆகஸ்ட் 6ம் தேதி நடத்தினர். இதில் மாநில அரசு வழங்கிய மருந்துகளை அளித்துள்ளனர். வயிற்றுப்புழுக்களை ஒழிக்கும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த அல்பெண்டசோல் மாத்திரைக்குப் பிறகு இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் மாத்திரிகளும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.

டாக்டர் பிரதீப் ஜாதவ் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்து கூறும்போது, “வெள்ளிக்கிழமை காலை குழந்தைகளுக்கு வயிற்று வலி, வாந்தி இருந்துள்ளது, இதனையடுத்து 161 குழந்தைகள் ராஜவாதி மருத்துவமனையிலும், 36 குழந்தைகள் கோவண்டி ஷதாப்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதற்கிடையே 12 வயது சிறுமி இதே கோளாறினால் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதன் கிழமை பள்ளிச் சென்ற சிறுமி வியாழனன்று திடீரென மரணமடைந்துள்ளார். இவர் அயர்ன் மற்றும் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை உட்கொண்டவுடன் ரத்த வாந்தி எடுத்ததாக பெற்றோர் புகார் எழுப்பினர். இந்நிலையில் இவரது பிரேதப் பரிசோதனை இந்த விவகாரத்தில் எங்கு தவறு நிகழ்ந்தது என்பதை எடுத்துரைக்கும் என்று கூறப்படுகிறது.

வெள்ளி மதியம் 22 குழந்தைகள், தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் உடல்நிலை இப்போது சீராக உள்ளதாக மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன.

12 வயது சிறுமி இறந்ததையடுத்து பைகன்வாடி சேரிப்பகுதி மக்கள் பதற்றமடைந்து தங்கள் குழந்தைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதித்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடற்புழுக்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் குறைக்கும் என்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்து ஃபோலிக் ஆசிட் மாத்திரை கொடுக்கப்படும்.

இந்நிலையில் இதன் பக்கவிளைவுதானா காரணம் என்பதை ஆய்வு செய்ய குழந்தைகளுக்குக் கொடுத்த மருந்துகளின் மாதிரிகளை மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு அமைப்புக் கேட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x