Last Updated : 10 Aug, 2018 05:35 PM

 

Published : 10 Aug 2018 05:35 PM
Last Updated : 10 Aug 2018 05:35 PM

தமிழக மீனவர் பிரச்சனையில் கவனம் செலுத்தாத மத்திய அரசு: மக்களவையில் அன்வர் ராஜா புகார்

தமிழக மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு கவனம் செலுத்தாமல் இருப்பதாக மக்களவையில் அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா புகார் கூறினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது குறித்து ராமநாதபுரம் தொகுதியின் அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா இன்று மக்களவையில் பேசியதாவது:

தமிழ்நாடு மீனவர்கள் படும் இன்னல்களை நான் பல முறை இந்த அவையில் வலியுறுத்தி வந்த போதிலும் மத்திய அரசு தொடர்ந்து அதில் கவனம் செலுத்த மறுத்துவருகிறது.

வெளியுறவு, வேளாண்மை, பாதுகாப்பு, உள்துறை, திறன் மேம்பாடு, நிதி, சுற்றுச்சுழல் ஆகிய அமைச்சகங்களை ஒருங்கிணைத்து பிரதம மந்திரி அலுவலகம் இந்த விஷயத்தில் செயல்படவேண்டும்.

இல்லையெனில் நமது ஏழை மீனவர்கள் தொடர்ந்து துயரங்களை அனுபவிக்க நேரிடும். குறிப்பாக இராமேஸ்வரம் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் பாரம்பரியமாக உள்ள நமது மீன்பிடி உரிமையும் பொருளாதார நலன்களும் கடுமையான பாதிப்புக்களை அடையும்.

நமது கடல்பகுதிகளில் மீன்பிடித்த மீனவர்களைத் தாக்கி அவர்களது மீன்பிடி படகுகளை பிடித்த மீன்களோடு இலங்கை கடற்படை கொண்டு சென்று இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. இதில் மத்திய அரசு இலங்கை வசமுள்ள இந்திய மீனவர்களின் மீன்பிடிப்படகுகளை மீட்க எந்த நடவடிக்கையையும் எடுக்காததை கண்டித்து கடந்த வாரம்ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் போராட்டங்களை நடத்தினார்கள்.

நமது கடல் பகுதியில் நமது மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நாம் கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது உறுதியான தேவை. நமது அரசியல் சாசனத்தின் 368 ஆவது பிரிவின்படி ஒரு திருத்தத்தை மேற்கொள்ளும் விதமாக இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கடலோர மணடலம் குறித்த சட்டத்தையும் மத்திய அரசு இயற்றவேண்டும். நான் கடந்த நான்காண்டுகளாக இந்த அவையில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் மாண்புமிகு பிரதமர் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x