Last Updated : 10 Aug, 2018 05:22 PM

 

Published : 10 Aug 2018 05:22 PM
Last Updated : 10 Aug 2018 05:22 PM

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திருச்சி சிவா இன்று வலியுறுத்தினார். இதற்கு மற்ற கட்சி உறுப்பினர்களும் மேசைகளை தட்டி வரவேற்று ஆதரவளித்தனர்.

இது குறித்து மாநிலங்களவையில் திருச்சி சிவா பேசியதாவது: இந்நாட்டின் உயர்ந்த அரசியல் தலைவரும், மாபெரும் திராவிடத் தலைவரான கருணாநிதி தன் 95 வயதில் காலமாகி உள்ளார். இதில் அவர் தன் 80 வருட காலத்தை பொது வாழ்க்கைக்காக அர்ப்பணித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடினார்.

ஐம்பது வருட காலங்கள் எந்த தடையும் இன்றி ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்தார். அவரது நீண்ட சாதனைப் பட்டியல் அவரது கீரிடத்தின் தோகைகளாக மிளிர்கின்றன. அவர் ஒரு ஆற்றல் மிகுந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், தத்துவஞானி, கொடை அளிப்பவர், நாடகக் கலைஞர் மற்றும் நடிகராகவும் இருந்தவர்.

80 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். அனைத்து துறைகளிலும் ஈடுஇணையற்ற சாதனையாளர். அவரது வார்த்தைகளால் விவரிக்க முடியாத சாதனைகள் படைத்தவர். சமூகப்போராளியான அவர் தன் இறுதி நாட்கள் வரை சமூகநீதி, மதநல்லிணக்கம், மாநில சுயாட்சி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றுக்காக போராடியவர்.

ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்தவர் இயற்றிய வரலாற்று சிறப்பு மிக்க சட்டங்கள் என்றும் நினைவுகூறுபவை. குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் பங்கு, விதவைகள் மறுவாழ்வு, குடிசை மாற்று வாரியம் மற்றும் அங்கீகரிக்கப்படாத பலருக்கான வாரியங்கள் போன்ற புரட்சிகரமான சீர்திருத்தங்கள் மேற்கொண்டார். சமூகத்தில் கேவலமாக சித்தரிக்கப்பட்டு வந்த திருநங்கைகளை மதிப்புமிக்க புதிய பெயருடன் அழைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கும் அதை செய்தார்.

இவை எல்லாம் மிகைப்படுத்தி கூறப்படுபவை அல்ல. மாறாக, அனைத்தும் வரலாறு. தன் கொள்கைகளுக்காக எதையும் விட்டுக் கொடுக்காதவர் அதே சமயத்தில் மனித உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர். எனவே, அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதினை அளித்து கவுரவப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இது, நாட்டிற்க்கு தொண்டாற்றிய அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x