Published : 10 Aug 2018 02:51 PM
Last Updated : 10 Aug 2018 02:51 PM

கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு: மூணாறு ரிசார்ட்டில் 69 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

 கேரள மாநிலம் மூணாறில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதால், ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ள 69 சுற்றுலாப் பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க ராணுவத்தினர் களம் இறங்கியுள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக பெருமளவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என அந்த மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு, முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாப் பகுதியான மூணாறில் நிலச்சரிவில் 69 சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். தேயிலைத் தோட்டங்கள் அதிகம் கொண்ட மூணாறுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்குள்ள பிரசித்தி பெற்ற ரிசார்ட் ஒன்றில் 20 வெளிநாட்டினர் உட்பட 69 சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ள நிலையில், அங்கு செல்லும் சாலை நிலச்சரிவில் சேதமடைந்துள்ளது. வாகனங்கள் மட்டுமின்றி அந்த வழியாக நடந்து செல்லக்கூட முடியாத நிலை இருப்பதால் அவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களை மீட்க ராணுவத்தினர் வந்துள்ளனர். முதலில் அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணி தாமதமடைந்துள்ளது. மேலும் நிலச்சரிவு அதிகம் நடக்கவும் வாய்ப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x