Last Updated : 10 Aug, 2018 11:41 AM

 

Published : 10 Aug 2018 11:41 AM
Last Updated : 10 Aug 2018 11:41 AM

காவடி எடுத்து வருவோர் வாகனங்கள் மீது நடத்திய தாக்குதல்: வைரலாகும் வீடியோ

 டெல்லி மற்றும் உ.பி.யில் காவடியுடன்  புனித யாத்திரை செல்வோர், இருவாகனங்களை தாக்கி சேதப்படுத்தினர். இதன் விடீயோ காட்சிகள் வைரலாகி, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

வட மாநிலங்களில், ஜூலை, ஆகஸ்டில் வரும் ஸ்ரவண மாதத்தை முன்னிட்டு சிவபக்தர்கள் காவடியுடன் சாலைகளில் புனித பாதயாத்திரை செய்கிறார்கள். கங்கை நீர் நிரம்பிய குவளை மற்றும் காவடியுடன் சென்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், கவுமுக் மற்றும் கங்கோத்ரி உள்ளிட்ட முக்கிய சிவாலாயங்களில் அபிஷேகம் செய்வார்கள்.

இந்நிகழ்ச்சி நிறைவடையும் நாட்களில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறம் உள்ள மாநிலங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் இருப்பது உண்டு. இந்த வருடம் நெரிசல் இன்றி பாதயாத்திரை நிறைவடைய டெல்லி, உ.பி மாநில போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய் காலை டெல்லியின் மோதி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் வந்த கார், காவடி எடுத்து வந்த ஒரு குழுவினர் மீது மோதியது. இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து காவடி எடுத்து வந்தவர்கள் கம்புகளால் காரை அடித்து சேதப்படுத்தியதுடன், கவிழ்த்தும் விட்டனர்.

இதை ஓட்டி வந்த இளம்பெண்ணும் அவருடன் வந்தவரும் போலீஸிடம் கார் அளித்தனர். அங்கு வந்த இருரோந்து போலீஸார் காவடி எடுத்து வந்தவர்களை சமாதானம் செய்தும் பிரச்சனை முடியவில்லை. எனவே, அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீஸார் முன்பாக கார் சேதப்படுத்தப்பட்ட காட்சி வீடியோ எடுக்கப்பட்டு சமூக இணையதளங்களில் வைரலானது.

இதன் மறுநாள் அதேபோன்ற மற்றொரு சம்பவம் உ.பி.யின் புலந்த்ஷெரில் நடைபெற்றது. இங்கு வாகனத்தில் ரோந்து வந்த போலீஸார் மற்றும் காவடி எடுத்து வருவோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், வாகனத்தை மடக்கிய காவடி எடுத்து வருவோர் அதன்மீது தாக்குதல் நடத்தினர்.

இவர்களுடன் சில உள்ளூர்வாசிகளும் இணைந்து போலீஸார் வாகனத்தை சேதப்படுத்தினர். பிறகு அவர்களுக்கு பயந்து போலீஸார் தம் வாகனத்தை பின்புறமாகவே ஓட்டிச்சென்று தப்பும் காட்சியும் சமூக இணையதளங்களில் வைரலானது.

இதன் மீது, ‘தாக்குதல் நடத்துவபவர்கள் சிவபக்தர்களா அல்லது ரவுடிகளா, தாக்கியவர்கள் மீது காவல்துறையினரின் நடவடிக்கை தேவை’ என்பது போன்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. புலந்த்ஷெஹர் சம்பவத்திலும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x