Published : 10 Aug 2018 10:46 AM
Last Updated : 10 Aug 2018 10:46 AM

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத ‘பேய்’ மழை; 26 பேர் பலி- சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என எச்சரிக்கை

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 26 பேர் பலியாகி இருப்பதாக மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதில் இடுக்கி மாவட்டத்தில் 13 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், கண்ணூரில் 3 பேரும், வயநாடு மாவட்டத்தில் 2 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள போதிலும், அணைக்கு வரும் நீரின் அளவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதுபோலவே முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டால் அந்த நீரும் இடுக்கி அணைக்கு வரும் என்பதால் அங்கு உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரளாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வேண்டிய உதவிகள் செய்வதாகக் கூறியுள்ளார். நிலைமையைக் கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அப்போன்ஸ் கண்ணன்தானம் கூறுகையில் ‘‘கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x