Last Updated : 10 Aug, 2018 08:34 AM

 

Published : 10 Aug 2018 08:34 AM
Last Updated : 10 Aug 2018 08:34 AM

தமிழ் உட்பட 15 மொழி வளர்ச்சிக்காக அகாடமி: டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு முடிவு

டெல்லியில் தமிழ் உட்பட 15 மொழிகளின் வளர்ச்சிக்காக அகாடமிகள் அமைக்க அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இதன்மூலம் டெல்லியில் தமிழ் மொழி வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் தலைநகரான டெல்லி யில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். இவர்களின் தாய்மொழியாக தமிழ் உட்பட பல்வேறு மொழிகள் உள்ளன. ஆனால், அவற்றை தம் பகுதியில் வளர்க்க தலைநகருக்கு இடம்பெயர்ந்தவர்களால் முடிவ தில்லை. இதை அம்மாநிலத்தை ஆளும் அரசால் மட்டுமே செய்ய முடியும் என்பதை அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசு உணர்ந் துள்ளது. எனவே, தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளை தலைநகரில் வளர்க்க வேண்டி புதிதாக அகாடமிகளை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான முடிவை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் கூடிய அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது.

இது குறித்து டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியா கூறும்போது, அனைத்து பகுதி மக்கள் வாழும் டெல்லி, கலாச்சாரங்களின் செல்வம் மிகுந்தது. இதனால், பன்முகப் பண்புகளுடன் பரந்த நோக்கமுடையதாகவும் விளங்குகிறது. இதை கட்டிக் காத்து வளர்ப்பது அரசின் கடமை’ எனத் தெரிவித்தார்.

டெல்லியின் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட போது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. எனவே, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கூடுதல் மொழிகளுக்கான அகாடமி தற்போது நிறைவேற்றப்பட உள்ளது. டெல்லியில் ஏற்கெனவே, இந்தி, பஞ்சாபி, சிந்தி, சமஸ்கிருதம், உருது, மைதிலி மற்றும் போஜ்புரி ஆகிய ஏழு மொழிகளுக்கான அகாடமிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அலுவலர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக உள்ளது. இதை பூர்த்தி செய்வதுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, அசாமி, காஷ்மீரி, மார்வாடி, ஹரியானாவி, கடுவாலி, குமாவுனி மற்றும் ஜோன்சாரி உள்ளிட்ட 15 மொழிகளுக்கு புதிதாகவும் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன. இவை, டெல்லியில் அம்மொழிகளின் வளர்ச்சிக்காக செயல்பட உள்ளன.

கடந்த மாதம் முதல் தமிழக அரசு சார்பிலும் சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரதநாட்டியப் பயிற்சிகள் துவக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x