Last Updated : 06 Aug, 2018 06:06 PM

 

Published : 06 Aug 2018 06:06 PM
Last Updated : 06 Aug 2018 06:06 PM

அசாமில் எஸ்டி பிரிவில் சேர்க்கக் கோரி கோச் ராஜ்பாங்ஷி சமூக அமைப்பினர் ரயில் மறியல் போராட்டம்; போலீஸ் துப்பாக்கிச் சூடு

அசாம் மாநிலத்தில் கோச் ராஜ்பாங்ஷி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டுமெனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு ரயில் போக்குவரத்தை நிறுத்த முயன்றனர். இக்கும்பலைக் கலைப்பதற்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்தனர்.

இன்று மாநிலம் முழுவதும் கோச் ராஜ்பாங்ஷி சன்மிலினி அமைப்பினர் நடத்திய ரயில் ரோகோ எனும் போராட்டத்தால் ரயில் போக்குவரத்து தடைபட்டது.

இதுகுறித்து அனைத்து கோச் ராஜ்பாங்க்ஸி மாணவர் (ஏகேஆர்எஸ்யூ) சங்கத் தலைவர் ஹிதேஷ் பார்மேன் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தார்.

திடீரென போலீஸார் தடியடிப் பிரயோகம் நடத்தியபோது, காலை 11.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. இதில் கோசாய்கான் பகுதியில் போராட்டக்காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக தடியடிப் பிரயோகம் செய்யப்பட்டது. ரயிலை நிறுத்த முயன்றவர்களைக் கலைப்பதற்காகவும் விண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் கோச் ராஜ்பாங்ஷி சன்மிலினி அமைப்பின் 15 தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கோச் ராஜ்பாங்க்ஸி சண்மிலானி தலைவர் ரஞ்சித் ராய் தெரிவிக்கையில், ''எங்கள் கோச் ராஜ்பாங்ஷி சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கவேண்டுமென நாங்கள் விடுத்த நியாயமான எங்கள் கோரிக்கைக்கு மத்திய மாநில பாஜக அரசுகள் செவி சாய்க்கவில்லை. எனவே, இரண்டு பாஜக அரசுகளையும் எதிர்த்து நாங்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை வழிநடத்தும் பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்குமுன் ஆறுமாதங்களுக்குள் எங்களுக்கு எஸ்டி அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் தேர்தலில் வென்றபிறகு தங்கள் பொறுப்பை அவர்கள் மறந்துவிட்டனர்'' என்றார்.

நூற்றுக்கணக்கானவர்கள் கைது

இன்று ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த சண்மிலினி அனைத்து கோச் ராஜ்பாங்க்ஸி மாணவர் சங்கம் உள்ளிட்ட கோச் ராஜ்பாங்க்ஸி சமூகத்தினர் அனைவருக்குமான ஒரு குடை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும் இந்த அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இப்போராட்டத்தில் மாநிலம் தழுவிய அளவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

கோச் ராஜ்பாங்க்ஸி சன்மிலானி தலைவர் ரஞ்சித் ராய் மற்றும் ஏகேஆர்எஸ்யூ அமைப்பின் பொதுச் செயலாளர் பிபல் ராய் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கைதுசெய்யப்பட்டு இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாற்றுப் பாதையில் ரயில் போக்குவரத்து

இப்போராட்டத்தினால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு நீண்ட தூரம் செல்லக்கூடிய ரயில்களும் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இப்போராட்டத்தினால் ரயில் போக்குவரத்து தடைபட்டது குறித்து ரயில்வே தலைமை செய்தி தொடர்பாளர் பிரணவ் ஜோதி ஷர்மா தெரிவிக்கையில்,  ''ராஜதானி எக்ஸ்பிரஸ் மற்றும் கவுகாத்தி பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. அலிபுர்தார் கோட்டத்தைச் சேர்ந்த இரு பணயிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x