Last Updated : 06 Aug, 2018 05:09 PM

 

Published : 06 Aug 2018 05:09 PM
Last Updated : 06 Aug 2018 05:09 PM

சூடுபிடிக்கும் நீதிபதி ஜோஸப் சீனியாரிட்டி விவகாரம்: தலைமை நீதிபதியைச் சந்தித்து மூத்த நீதிபதிகள் முறையீடு

உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.ஜோஸப்பின் சீனியாரிட்டியை மத்திய அரசு குறைந்தது தொடர்பாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைச் சந்தித்து மூத்த நீதிபதிகள் இன்று முறையிட்டனர்.

இதனால், நீதிபதிகளை நியமிக்கும் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்புக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் மீண்டும் வலுத்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜோஸப் பணியாற்றிய காலத்தில் இருந்தே பாஜக தலைமையிலான மத்திய அரசு அவருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் ஹரிஸ்ராவத் பதவியில் இருந்தபோது, எம்எல்ஏக்கள் பாஜக தரப்பில் அணி மாறியதால், ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டது.

இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அது தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோஸப் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, மீண்டும் காங்கிரஸ் முதல்வர் ஹரிஸ்ராவத் ஆட்சியைக் கொண்டுவந்தார். இது, அப்போது பாஜகவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனால் நீதிபதி கே.எம்.ஜோஸப்பை உச்ச நீதிபதியாக உயர்த்த மத்திய அரசு மறுப்பதாகக் காரணம் கூறப்பட்டது.

அதன்பின் கடந்த ஜனவரி மாதம் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு நீதிபதி கே.எம்.ஜோஸப், இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது. ஆனால், இதில் இந்து மல்ஹோத்ரா பெயரை மட்டும் ஏற்றுக்கொண்ட அரசு, ஜோஸப்பின் பெயரை திருப்பி அனுப்பியது.

அதன்பின் நடந்த கொலீஜியம் கூட்டத்திலும் ஜோஸப்பின் பெயர் மீண்டும் அனுப்பப்பட்டது. அவரின் பெயரோடு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் பெயரையும் பரிந்துரைத்தது.

கடந்த 6 மாதங்களாக ஜோஸப்பின் பெயரை ஏற்பதில் இழுபறி செய்த மத்திய அரசு, தற்போது, ஜோஸப்ப் உள்ளிட்ட 3 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஏற்க ஒப்புதல் அளித்துக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

அதில் நீதிபதிகள், இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோரின் பெயருக்கு பின்னால் ஜோஸப் பெயரை மத்திய அரசு சேர்த்துள்ளது.

சீனியாரிட்டி அடிப்படையில், இந்த இரு நீதிபதிகளுக்கு முன்பே தேர்வு செய்யப்பட்டு கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர் நீதிபதி ஜோஸப். ஆனால், ஜோஸப்பின் பெயரை இந்திரா பானர்ஜி மற்றும் வினீத் சரண் பெயருக்குப் பின் சேர்த்துள்ளது நீதிபதிகள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில நீதிபதிகள் வேதனை ஊடகங்களுக்குப் பேட்டி அளித்திருந்தனர்.

‘‘நீதித்துறையில் மத்திய அரசு அப்பட்டமாகத் தலையிடுகிறது தெளிவாகிறது. நீதிபதி ஜோஸப் பெயர்தான் முதன்முதலில் கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டது. அப்படி இருக்கும்போது, நியமனத்தில் அவருக்குத்தான் சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால், நீதிபதி ஜோஸப்பின் பெயர், நியமனத்தில் 3-வதாக குறிப்பிட்டு சீனியாரிட்டியை குறைத்திருக்கிறது. ஜூனியர் நீதிபதிகளுக்குப் பின் கடைசியாக ஜோஸப்பின் பெயர் இருக்கிறது.

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோர் சமீபத்தில் கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்கள். ஜோஸப் 6 மாதங்களுக்கு முன்பே கொலிஜியத்தால் தேர்வு செய்து அனுப்பப்பட்டவர்’’ என மூத்த நீதிபதிகள் சிலர் ஆதங்கம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொலீஜியத்தில் இடம் பெற்றுள்ள நீதிபதிகள் மதன் பி லோக்கூர், குரியன் ஜோஸப் உள்ளிட்ட சில நீதிபதிகள் இன்று நீதிமன்ற பணிகள் தொடங்குவதற்கு முன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீதிபதி ஜோஸப் சீனியாரிட்டி குறைக்கப்பட்டது தொடர்பாகச் சந்தித்து பேசியதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று விடுப்பு என்பதால், அவர் நீதிபதிகளுடன் வரவில்லை.

இந்த விவகாரம் குறித்து நீதிபதி ரஞ்சன் கோகாய் வந்தவுடன் அவருடன் கலந்தாய்வு செய்து, மத்திய அரசிடம் எடுத்துச் செல்வதாக தீபக் மிஸ்ரா உறுதியளித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நீதிபதி ஜோஸப் கடந்த 2004, அக்.14-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2014, ஜூலை 31-ம் தேதி தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் 2023-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதிவரை பதவியில் இருப்பார்.

அதேபோல இந்திரா பானர்ஜி, 2002, பிப்ரவரி மாதம் 5-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2017, ஏப்.5ம் தேதி தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற நிலையில், அவர் 2022, செப் 23-ம் தேதிவரை பதவியில் இருப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x