Last Updated : 06 Aug, 2018 03:41 PM

 

Published : 06 Aug 2018 03:41 PM
Last Updated : 06 Aug 2018 03:41 PM

ராய்பரேலியில் போட்டியிடுகிறாரா பிரியங்கா? அலகாபாத்தில் மீண்டும் சுவரொட்டி சர்ச்சை

வரும் மக்களவைத் தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவதாக மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. இவருக்கு ஆதரவாக மீண்டும் உ.பி.யில் அலகாபாத்தில் வெளியிடப்பட்ட ஒரு சுவரொட்டி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உ.பி.வாசிகள் இடையே ஓரிரு தினங்களாக வைரலாகி வருகிறது ஒரு காங்கிரஸ் சுவரொட்டி. இதில், ‘இந்திரா கி கூன்: பிரியங்கா கமிங் சூன் (இந்திராவின் ரத்தம் பிரியங்கா விரைவில் வருகிறார்)’ எனக் குறிப்பிடப்பட்டு, அதில் இந்திரா காந்தி மற்றும் அவரது பேத்தியான பிரியங்கா வதேராவின் படங்கள் பிரதானமாக இடம் பெற்றுள்ளன.

அலகாபாத்தின் காங்கிரஸ் பிரமுகர் ஹசீப் அகமது பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்தச் சுவரொட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது. நேற்று டெல்லி தலைமையகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திற்கு சோனியா காந்தி செல்லவில்லை. இதற்கு அவரது உடல் நலக்குறைவு காரணமாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், ராய்பரேலியில் தன் தாய்க்குப் பதிலாக பிரியங்கா போட்டியிடுவதாகப் பரவி வரும் செய்தி மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இதுபோல், ஒவ்வொரு முறையும் அலகாபாத்தின் காங்கிரஸார் பிரியங்காவிற்கு ஆதரவாக சுவரொட்டிகளையும், பதாகைகளையும் அமைத்து வருகின்றனர். இதற்கு தொடகத்தில் மறுப்பு வெளியிட்டு வந்த பிரியங்கா சமீபகாலமாக அமைதி காக்கிறார்.

இது குறித்து 'இந்து தமிழ்' இணையதள செய்திப் பிரிவிடம் பேசிய காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, ''ராய்பரேலியில் இந்த முறை தான் போட்டியிடப் போவதில்லை என சோனியா இன்றுவரை கூறவில்லை. எனவே, அங்கு வேறு வேட்பாளரை நிறுத்துவது குறித்து கட்சித் தலைமை யோசிக்கவே இல்லை. பிரியங்கா தரப்பிலும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விருப்பம் எழுந்தால் அதற்கு தலைமை நிச்சயம் மறுக்காது'' எனத் தெரிவித்தனர்.

கடந்த 1999 முதல் ராய்பரேலி காங்கிரஸ் வசம் இருந்து வருகிறது. இதற்கு முன் 1996 மற்றும் 1998 ஆகிய இரு தேர்தல்களிலும் ராய்பரேலியில் பாஜக வென்றது. இதற்கு முன் அதன் எம்.பி.யாக இருந்த இந்திரா காந்தி 1977-ல் ஒருமுறை தோல்வியைத் தழுவி இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x