Published : 05 Aug 2018 07:42 PM
Last Updated : 05 Aug 2018 07:42 PM

கொலீஜியம் மத்திய அரசு மோதல் தொடர்கிறதா?- நீதிபதி ஜோஸப் சீனியாரிட்டியை குறைத்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி

உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவருமான நீதிபதி ஜோஸப்பின் சீனியாரிட்டியை மத்திய அரசு குறைத்துள்ளதாக மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலீஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் முடிந்துவிட்டதாகக் கருதும்போது, மீண்டும் தொடர்கிறது. அரசின் அறிவிக்கையில், மூத்த நீதிபதியாக கே.எம். ஜோஸப்பின் பெயர், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரணுக்கு பின் கடைசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு நீதிபதிகளைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பும். மத்திய அரசு அதைப் பரிசீலித்து அதற்கு ஒப்புதல் அளிக்கிறது. இது காலம் காலமாக நடந்து வரும் முறையாகும்.

இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 10-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு, மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோஸப் ஆகிய இருவரை நீதிபதியாகத் தேர்வு செய்தது.

இதில் இந்து மல்ஹோத்ராவின் பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு நீதிபதி ஜோஸப் பெயரை ஏற்க மறுத்து, அவரின் பெயரை மறுபரிசீலனை செய்யக் கோரி கொலீஜியத்துக்கு திருப்பி அனுப்பியது.

இதனால், நீதிபதி கே.எம்.ஜோஸப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளிப்பதில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் உருவாகியது. பின்னர் 2-வது முறையாக கொலீஜியம் கூடியபோது, மீண்டும் கே.எம். ஜோஸப்பின் பெயரை பரிந்துரை செய்து அனுப்பியது.

இந்நிலையில், கடந்த 6 மாத இழுபறிக்குப் பின், கொலீஜியம் 2-வது முறையாக அளித்த பட்டியலில் மூத்த நீதிபதிகள் அடிப்படையில் உத்தகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோஸப், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி(கொல்கத்தா), குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் சரண்(அலகாபாத்) ஆகியோரின் பெயர்களை பரிந்துரை செய்து அனுப்பி இருந்தது. அந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வாரத்தில் இவர்கள் மூன்று பேரும் பதவி ஏற்க இருக்கிறார்கள்.

இந்நிலையில், மத்திய அரசின் அறிவிக்கையில், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினித் சரண் ஆகியோரின் பெயருக்கு பின், மூத்த நீதிபதி கே.எம்.ஜோஸப்பின் பெயரை பதிவுசெய்து அவரின் சீனியாரிட்டியை மத்திய அரசு குறைத்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இது குறித்து நீதிபதி ஒருவர் வேதனைப்பட்டதாகத் தனியார் செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அந்த நீதிபதி கூறுகையில், “ நீண்ட இழுபறிக்குபின், கொலீஜியம் பரிந்துரைத்த ஜோஸப் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், மூத்த நீதிபதியான அவரின் பெயர் அரசின் அறிவிக்கையில் சீனியாரிட்டியை பின்பற்றப்படாமல் தரம் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்துப் பேச இருக்கிறோம்.

நீதித்துறையில் மத்திய அரசு அப்பட்டமாக தலையிடுகிறது தெளிவாகிறது. நீதிபதி ஜோஸப் பெயர்தான் முதன்முதலில் கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டது. அப்படி இருக்கும்போது, நியமனத்தில் அவருக்குத்தான் சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால், நீதிபதி ஜோஸப்பின் பெயர், நியமனத்தில் 3-வதாக குறிப்பிட்டு சீனியாரிட்டியை குறைத்திருக்கிறது. ஜூனியர் நீதிபதிகளுக்குப் பின் கடைசியாக ஜோஸப்பின் பெயர் இருக்கிறது.

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோர் சமீபத்தில் கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்கள். ஜோஸப் 6 மாதங்களுக்கு முன்பே கொலிஜியத்தால் தேர்வு செய்து அனுப்பப்பட்டவர்”எனத் தெரிவித்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதலால், நீதிபதி ஜோஸப்ப நியமனத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வராமல் இன்னும் தொடர்ந்து வருகிறது.

மோதலுக்கு என்ன காரணம்?

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து உத்தரகண்ட் மாநிலத்தில் தலைமை நீதிபதியாக ஜோஸப் பணியாற்றி வருகிறார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் ஹரிஸ்ராவத் பதவியில் இருந்தபோது, எம்எல்ஏக்கள் பாஜக தரப்பில் அணி மாறி குழப்பம் ஏற்பட்டது.

இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அது தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோஸப் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, மீண்டும் காங்கிரஸ் முதல்வர் ஹரிஸ்ராவத் ஆட்சியைக் கொண்டுவந்தார். இது அப்போது பாஜகவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனால் நீதிபதி கே.எம்.ஜோஸப்பை உச்ச நீதிபதியாக உயர்த்த மத்திய அரசு மறுப்பதாகக் காரணம் கூறப்பட்டது.

இதற்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது, 2014-ம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கொலீஜியம் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்தது. ஆனால் அவரின் பெயரையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருங்கியவராக இருந்த கோபால் சுப்பிரமணியம்,கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் கடுமையான வாதங்களை எடுத்துவைத்து வாதாடி, மிகத்தீவிரமாகச் செயல்பட்டார். அந்தக் காரணத்தால் அப்போது அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x