Published : 05 Aug 2018 06:26 PM
Last Updated : 05 Aug 2018 06:26 PM

அன்று ஷேர் ஆட்டோ டிரைவர்: இன்று மாநகர மேயர்

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆட்டோ டிரைவாக பணியாற்றி நாள்தோறும் ரூ.200க்கு கடினமாக உழைத்தவர், மகாராஷ்டிரா மாநில பிசிஎம்சி மாநகராட்சியின் மேயாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பிம்ரி-சின்ச்வாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராகுல் ஜாதவ்(36) மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புனேயின் புறகநகர் பகுதி பிம்ரி சின்ச்வாத். அதிகமான தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும் நிறைந்துள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில் கடந்த 1997 முதல் 2002-ம் ஆண்டுவரை ஷேர் ஆட்டோ ஓட்டியவர் ராகுல் ஜாதவ். 10—ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை நடத்தி வந்தார்.

நாள் முழுவதும் கடினமாக உழைத்து ஆட்டோ ஓட்டினாலும், அனைத்துச் செலவுகளும் போக ரூ.200 கிடைப்பது கடினமாக இருக்கும். அப்படி இருந்த சூழலில் ஆட்டோ ஓட்டும் தொழிலை விட்டு, விவசாயத்தில் இறங்கினார் ராகுல். ஆனால், காலப்போக்கில் விவசாயத்தில் இருந்து வருமானம் ஏதும் கிடைக்கவில்லை என்று தெரிந்தபின் அதிலிருந்து ராகுல் வெளியேறினார்.

அதன்பின் தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக ராகுல் பணியாற்றினார். ராஜ் தாக்ரேயின் பேச்சால் ஈர்க்கப்பட்ட ராகுல், கடந்த 2007-ம் ஆண்டு ராஜ்தாக்கரே எம்என்எஸ் கட்சி தொடங்கியதும் அதில் ராகுல் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினார்.

கடந்த 2012-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எம்என்எஸ் கட்சி சார்பில் வார்டு உறுப்பினராகப் போட்டியிட்டு ராகுல் வெற்றி பெற்றார். அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எம்என்எஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ராகுல் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்புப் பெற்று ஜாதவ்வாடி வார்டில் போட்டியிட்டு 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பிம்ரி சின்ச்வாத் மாநகராட்சியில் மேயர் தேர்வு என்பது உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தோடு தேர்வு செய்யப்பட்டு வந்தது ஆனால், இந்த முறை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன் பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக ராகுல் ஜாதவ் நிறுத்தப்பட்டார், அவரை எதிர்த்து என்சிபி கட்சி சார்பில் வினோத் நாதே போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் ராகுலுக்கு 80 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட என்சிபி வேட்பாளர் வினோத் நாதேவுக்கு 33 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. சிவசேனா கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தனர். இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற ராகுல் ஜாதவ் மேயராக பொறுப்பேற்க உள்ளார்.

துணை மேயராக பாஜகவின் சச்சின் சின்ச்வாடே 79 வாக்குகள் பெற்று, என்சிபி வேட்பாளர் விநாயகா தப்கிரை தோற்கடித்தார். விநாயகா தப்கிர் 32 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

தனது வெற்றி குறித்து ராகுல் ஜாதவ் கூறுகையில், “ எனக்கு சாமானிய மக்களின் வேதனை என்ன என்பது எனக்குப் புரியும். குறிப்பாக ஆட்டோ டிரைவர்கள் படும் துயரம் தெரியும். என்னுடைய பதவிக்காலத்தில், ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்வுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x