Published : 04 Aug 2018 08:37 PM
Last Updated : 04 Aug 2018 08:37 PM

பேருந்தில் சந்தித்த அவமானம் ஐபிஎஸ் அதிகாரியாக்கியது: பெண் எஸ்பியின் வைராக்கியம்

பேருந்தில் தனது தாயாருக்கு கிடைத்த அவமானத்தை மனதில் வைத்து வைராக்கியத்துடன் படித்து ஐபிஎஸ் அதிகாரியானார் கண்டக்டரின் மகள். வைராக்கியம் ஒன்றே தன்னை ஆளாக்கியது என்று பேட்டியளித்துள்ளார்.

ஹிமாச்சலப்பிரதேசத்தில் குல்லு மாவட்ட காவல்துறை எஸ்பியாக பதவி வகிக்கும் ஷாலினி நான்கு ஆண்டுகளுக்கு முன் ஐபிஎஸ் பயிற்சி முடித்து காவல் பணியில் இணைந்தவர். இமாச்சல பிரதேசத்தில் சாதாரண கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஷாலினியின் தந்தை ரமேஷ் பஸ் கண்டக்டர். தாயார் சுபலதா அக்னிஹோத்ரி வீட்டில் தையல் எந்திரம் மூலம் சிறு சிறு துணிகள் தைத்து கொடுத்து கணவருக்கு உதவியவர்.

தனது எட்டு வயதில் தனது தாயாருடன் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது அவர்களுக்கு பின்னால் நின்றுக்கொண்டிருந்த ஆண் பயணி ஒருவன் கம்பியில் கைவைக்கும் சாக்கில் ஷாலினியின் அம்மாவின் மீது உரசியபடி வர பல முறை ஷாலினியின் தாயார் எச்சரித்தும் கண்டுக்கொள்ளாத அந்த நபர் வழக்கமாக பேருந்தில் உரசும் நபர்கள் சொல்வது போல் நீ என்ன பெரிய டிசியா? உன் பேச்சை கேட்க. என்று கேட்டுள்ளார்.

இது குழந்தை ஷாலினியின் மனதில் ஆறாத வடுவாக பதிந்துவிட்டது. டிசி(காவல் துணை ஆணையர்) என்றால் பெரிய பதவி, டிசி சொன்னால் இதுபோன்ற தகராறு செய்யும் ஆண்கள்கூட அச்சப்படுவார்கள், ஆகவே படித்து டிசி ஆகவேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். பிற்காலத்தில் டிசி என்றால் காவல் துணை ஆணையர் என்பது தெரியவந்தது. அதனால் அவர் சோர்ந்து விடாமல் அதை நோக்கி பயணத்தை தொடர்ந்தார், அதுவே வைராக்கியமாக மாறியது.

ஷாலினியின் குடும்பம் நடுத்தரக் குடும்பத்தைவிட கீழே உள்ள குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து யூபிஎஸ்சி தேர்வு பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது ஆனால் தன்னால் அவ்வளவு உயரத்துக்கு வந்ததற்கு காரணம் பெற்றோர் தான் என்று ஷாலினி கூறியுள்ளார்.

தான் பிளஸ்டூ தேர்வில் குறைந்த அளவே மதிப்பெண் பெற்றபோதும் தன்னை தேற்றி முடியும் என்று படிக்க வைத்தவர்கள் தனது பெற்றோர் என்கிறார் ஷாலினி. பிளஸ்டூ தேர்வுக்கு பின்னர் கல்லூரியில் வேளாண் துறையில் பட்டம் பெற்ற ஷாலினி தனது ஐபிஎஸ் கனவுக்கு பெரிதும் உதவியது இலவசமாக கிடைத்த இண்டெர்நெட் வசதிதான் அதன் மூலம் சிவில் தேர்வுக்கான பயிற்சியை எடுக்க முடிந்தது.

தனது தந்தை வாழ்வில் பல இன்னல்கள், அவமானங்களை சந்தித்தவர். மிசௌரியில் உள்ள அகடாமியில் நாங்கள் உள்ளே நுழைந்த அந்த நிமிடம் வாங்க சார் என்று அவரை மரியாதையாக அழைத்தனர். அந்த தருணத்தில் அனைத்தையும் அடைந்துவிட்டேன் என்று முழுப்பெருமிதம் கொண்டேன் என்கிறார்.

அதன்பின்னர் ஐபிஎஸ் அகடாமியில் பயிற்சி பெற்று 65 வது பேட்சில் ஐபிஎஸ் தேர்வு பெற்ற ஷாலினி ஏஎஸ்பியாக ஷிம்லாவில் நியமிக்கப்பட்டார். தற்போது ஹிமாசலப்பிரதேசத்தில் குல்லு மாவட்ட எஸ்பியாக பதவி வகிக்கிறார். காக்கி உடை அணிந்தது சாதாரண மக்களுக்கு சேவை செய்யவே என்கிறார் ஷாலினி. அவரது முக்கியமான பதிவு “நீங்கள் எத்தகைய பின்னணியில் இருந்து வருகிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதற்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். கனவுகளும் நிறைவேறும்” என்பதே. இதைத்தான் அப்துல் கலாம் கனவுக்காணுங்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x