Published : 24 Jul 2018 09:06 PM
Last Updated : 24 Jul 2018 09:06 PM

மாணவர்களின் கல்விக்கடன் பிரச்சினைக்காக இணைந்து குரல் கொடுத்த திமுக, அதிமுக எம்.பி.க்கள்.

வங்கியில் கல்விக்கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்த முடியாத மாணவர்களின் வட்டியை அரசே ஏற்க வேண்டும் அல்லது வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் இன்று வலியுறுத்தினார்.

அதே சமயம், மாணவர்களின் கல்விக்கடனை வாராக்கடன் பட்டியலில் சேர்த்தால் எதிர்காலத்தில், அந்த மாணவர்களால் வங்கியில் எந்தவிதமான கடன்தொகையும் கடன் பெற முடியாமல் போய்விடும் ஆதலால், வராக்கடனில் சேர்க்கக்கூடாது என்று திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். திமுக வைத்த இந்த கோரிக்கைக்கு அதிமுக எம்.பி.க்களும் ஆதரவளித்தனர்.

இது குறித்து திமுக மூத்த எம்.பி.திருச்சி சிவா பேசியதாவது:

நம் நாட்டில் உயர்கல்வி பெறுவதற்கான செலவு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை பெற பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், குடும்பத்தின் முதல் பட்டதாரிகளும் தேசிய வங்கிகளில் கல்விக்கடனை நம்பி உள்ளனர். ஆனால், அவர்கள் பெறும் உயர்கல்வி உடனடி வேலைவாய்ப்பாக மாறுவதில்லை.

இதுபோன்ற மாணவர்கள் தம் கல்விக்கடனை திரும்பச் செலுத்துவது எளிதானது அல்ல. இவர்கள் கடன் பெறும் நாள் முதல் அதை திரும்பச் செலுத்தும் தவணை துவங்கும் வரையும் கூட வங்கிகள் வட்டியை வசூல் செய்கின்றனர். என்னிடம் உள்ள ஒரு மாணவரின் உதாரணப்படி, ரூ.1,76,990 பெற்றவர் அதை , ரூ.2,82,047 தொகையை திரும்ப செலுத்தி உள்ளார்.

இதில், தவணை செலுத்தத் துவங்கிய் காலம் வரையிலும் சேர்த்து ரூ.1,05,000 தொகை வட்டியாக செலுத்தி உள்ளார். இதில் இடைக்கால தொகைக்கான வட்டியை மத்திய அரசு அல்லது அந்த வங்கிகள் ஏற்று அதை மாணவருக்கு தள்ளூபடி செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, அந்த கல்விக்கடனை திரும்பச் செலுத்த முடியாத மாணவர்கள் வராக்கடன் எனப்படும் என்.பி.ஏ பட்டியலில் சேர்க்கப்படக் கூடாது. . ரூ.5,000 கோடி கடனாகப் பெற்றவர்கள் கூட என்பிஏ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவ்வாறு சேர்த்தால் எதிர்காலத்தில் அந்த மாணவர்கள் தங்கள் வாழ்க்கை வளத்துக்காக எந்தவிதமான கடனும் வங்கியில் பெறமுடியாத சூழலில் அவர்களின் கடன்மதிப்பீடு தரம் குறைந்துவிடும்.

கல்விக்கடனை செலுத்தாதவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் நாட்டின் எந்த வங்கிகளிலும் எந்தவகையான கடன்களும் பெற முடியாமல் CIBIL(Credit Information Bureau of India Limitd) இணையதளத்தில் வெளியிடப்பட்டு தடை விதிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு திண்டாட்டம் உள்ள இந்த காலத்தில் இந்த தடையால் அவர் வங்கிக்கடன் பெற்று சுயதொழிலும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த தடையையும் நீக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திமுகவிற்கு அதிமுக ஆதரவு திமுகவின் திருச்சி சிவா எழுப்பிய நியாயமான கோரிக்கையை மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களும் ஆதரவளித்தனர்.

இதை தாமும் வலியுறுத்துவதாக அதிமுக உறுப்பினர்களான விஜிலா சத்யாணந்த், ஏ.கே.செல்வராஜ் மற்றும் புதுச்சேரியின் என்.கோகுலகிருஷ்ணன் ஆகியோர் அவைத் தலைவர் எம்.வெங்கய்யநாயுடுவிடம் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x