Published : 24 Jul 2018 02:25 PM
Last Updated : 24 Jul 2018 02:25 PM

பாலை விட பசு கோமியத்துக்குத்தான் ‘டிமாண்ட்’ அதிகம்: ராஜஸ்தானில் லிட்டர் ரூ.30க்கு விற்பனை

 

ராஜஸ்தான் மாநிலத்தில் பாலுக்கு கிடைக்கும் விலையைக் காட்டிலும், பசுவின் கோமியத்துக்குத்தான் அதிகமான விலை கிடைப்பதால், பசு மாடு வளர்ப்பவர்கள் இரட்டை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக உயர்ரக பசுக்களான கிர், தர்பாக்கர் ஆகிய பசுக்களின் சிறுநீர் லிட்டர் குறைந்தபட்சம் ரூ.15 முதல் ரூ.30 வரை மொத்தச் சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால், பால் ஒருலிட்டருக்கு ரூ.22 முதல் ரூ.25 வரை மட்டுமே கிடைக்கிறது.

இதனால், ராஜஸ்தான் மாநிலத்தில் பசு மாடுகள் வளர்ப்போருக்குப் பால் வியாபாரத்தைக் காட்டிலும், கோமியம் விற்பனையின் மூலம் கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது.

ஜெய்ப்பூரில் இயற்கை வேளாண் பண்ணை நடத்தி வரும் கைலேஷ் குஜ்ஜார் கூறுகையில், ''நான் மாட்டுப் பண்ணையும், இயற்கை பண்ணையும் வைத்திருக்கிறேன். பால் விற்பனையைக் காட்டிலும் இப்போது, பசுவின் கோமியத்தை விற்பனை செய்வதன் மூலம் எனக்குக் கூடுதலாக 30 சதவீதம் லாபம் கிடைக்கிறது.

இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குப் பதிலாக பசுவின் கோமியம் சிறந்த மாற்று மருந்தாக இருப்பதால், இதை விவசாயிகள் விரும்புகிறார்கள். மேலும், மருத்துப் பயன்பாட்டுக்கும், வீட்டில் பூஜைகள் செய்வதற்கும் மக்கள் கோமியத்தை அதிகமாக வாங்கிச் செல்கிறார்கள்.

இப்போதெல்லாம் நான் இரவில் அதிகமாகக் கண்விழிக்கிறேன். பசுவின் கோமியம் வீணாக கழிவுநீரோடையில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அதைப் பிடிப்பதற்காக கண் விழித்திருக்கிறேன். பசு நமது தாய், அதற்காக இரவு முழுவதும் விழித்திருப்பதில் தவறில்லை'' எனத் தெரிவித்தார்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த பால் வியாபாரி ஓம் பிரகாஷ் மீனா, பால் வியாரத்தில் லாபம் குறைந்துவிட்டதைத் தொடர்ந்து இப்போது, பசுவின் கோமியம் வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார். இதற்காக கிர் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து நாள்தோறும் கோமியம் வாங்கி வந்து விற்பனை செய்துவருகிறார்.

அவர் கூறுகையில், ''இப்போது பால் விற்பனையில் கிடைக்கும் லாபத்தைக் காட்டிலும் பசுவின் கோமியத்தை விற்பனை செய்வதன் மூலம் லாபம் அதிகமாகக் கிடைக்கிறது. ஒரு லிட்டர் கோமியத்தை ரூ.30-க்கு வாங்கி அதை ரூ.50 வரை இயற்கைப் பண்ணைகளிலும், வீடுகளிலும் விற்பனை செய்கிறேன்.

பயிர்களைப் பூச்சி தாக்குவதில் இருந்து காக்க பசுவின் கோமியத்தை பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும் யாகம் வளர்க்கவும், பஞ்சகவ்யம் செய்யவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் கோமியத்துக்கு தேவை அதிகமாக இருக்கிறது “ ஓம் பிரகாஷ் மீனா எனத் தெரிவித்தார்.

உதய்பூரில் உள்ள மகாராணா பிரதாப் வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு மாதத்துக்கு 500 லிட்டர் பசுவின் கோமியம் உரம் தயாரிக்க தேவைப்படுகிறது. இதனால், சுற்றுவட்டார விவசாயிகளிடம் இருந்து பசுவின் கோமியத்தை நாள்தோறும் வாங்கி வருகிறது.

பல்கலையின் துணைவேந்தர் உமா சங்கர் கூறுகையில், ''வேளாண் சோதனைத் திட்டங்களுக்காக மாதத்துக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பசுவின் கோமியத்தை விலைக்கு வாங்குகிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x