Last Updated : 24 Jul, 2018 01:16 PM

 

Published : 24 Jul 2018 01:16 PM
Last Updated : 24 Jul 2018 01:16 PM

தாஜ்மஹாலைப் பாதுகாக்கும் செயல் திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு தாக்கல்

உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலைப் பாதுகாக்கும் செயல் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

தாஜ்மஹாலைச் சுற்றி பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவிப்பது, தாஜ்மஹாலின் வெள்ளை பளிங்கு கற்களுக்கு சேதம் விளைவிக்கும் தொழிற்சாலைகளை மூடுவது, மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டுவதை நிறுத்துவது உள்ளிட்ட திட்டங்களைத் தெரிவித்துள்ளது.

17-ம் நூற்றாண்டில் ஆக்ராவில் எழுப்பப்பட்டது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால். முகலாய மன்னன் ஷாஜகான் தனது அன்பு மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலை எழுப்பினார். யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய சின்னமாக தாஜ்மஹால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,நூற்றாண்டுகள் கடந்தும் அழகு மாறாமல் இருந்த தாஜ்மஹால், தொழில் வளர்ச்சி காரணமாக, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, மாசு காரணமாக அதன் அழகைச் சிறிது சிறிதாக இழந்து வெள்ளை பளிங்கு கற்களின் நிறம் மங்கத் தொடங்கியது.

மேலும், யமுனை ஆற்றிலும் ஏராளமான குப்பைகளும், கழிவுநீரும் கலந்து ஆறும் மாசடைந்தது. இதையடுத்து, பல்வேறு பொதுநல மனுக்கள் தாஜ்மஹாலையும், யமுனையை நதியையும் பாதுகாக்கக் கோரி வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் தாஜ்மஹாலைப் பாதுகாக்க உத்தரப் பிரதேச அரசு செயல் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், உ.பி. அரசு எந்தத் திட்டத்தையும் உருவாக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து, கடந்த 11-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் உ.பி. அரசைக் கடுமையாக விமர்சித்தனர். தாஜ்மஹாலைப் பாதுகாக்க முடிந்தால், பாதுகாப்பாக வையுங்கள், இல்லாவிட்டால், இடித்து தூள் தூளாக்குங்கள் என்று கடுமையாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, உத்தரப் பிரதேச அரசு தாஜ்மஹாலைப் பாதுகாக்கும் செயல் திட்டத்தை இன்று நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் தாக்கல் செய்தது.

உத்தரப் பிரதேச அரசு சார்பில் வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டியா ஆஜராகினார். அவர் கூறுகையில், ''உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலைச் சுற்றி பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவித்துள்ளோம். பிளாஸ்டிக் பாட்டிலில் கொண்டு செல்லப்படும் குடிதண்ணீர் கூட அனுமதிக்கப்டாது.

தாஜ்மஹாலைச் சுற்றி இருக்கும், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் கணக்கெடுத்து அவை அனைத்தும் மூடப்படும். தாஜ்மஹாலுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் வகையில், கூடுதலாக சுற்றுலா வசதிகள் செய்யப்படும்.

ஆக்ராவில் தாஜ்மஹாலைப் பார்க்க வரும் பயணிகள் இடையூறின்றி சென்று வருவதற்கு ஏற்ப, முழுமையான போக்குவரத்து மேலாண்மை திட்டம் உருவாக்கப்படும்.

யமுனை ஆற்றங்கரை பகுதியில் சாலையும் அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். பாதசாரிகள் நடக்கும் இடம் அதிகப்படுத்தப்படும்.

யமுனை ஆற்றங்கரையைச் சுற்றி எந்தப் பகுதியிலும் புதிதாகக் கட்டிடம் கட்டுவது அனுமதிக்கப்படாது. ஆற்றின் இரு கரைஓரங்களிலும், மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமை காக்கப்படும்'' என்றார்.

தாஜ்மஹாலைப் பராமரிக்கும் பணியை உச்ச நீதிமன்றம் தனது மேற்பார்வையில் எடுத்துக் கண்காணித்து வருவதால், உ.பி. அரசுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x