Published : 22 Jul 2018 07:52 PM
Last Updated : 22 Jul 2018 07:52 PM

“முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பு”: சசி தரூர் சர்ச்சைக் கருத்து

ஆல்வாரில் முஸ்லிம் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இப்போது இருக்கும் நிலையில் முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பு என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே உள்ள ராம்கர் என்ற கிராமத்தில் இரண்டு பசு மாடுகளுடன் வந்த இளைஞர்கள் இருவரை ஒரு கும்பல் வெள்ளிக்கிழமை வழிமறித்துள்ளது. பசு மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றால் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் ஒருவர் அந்தக் கும்பலிடம் இருந்து தப்பியோடினார். இதையடுத்து மற்றொரு இளைஞரான அக்பர் கானை அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியது. அக்பர் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பசுக்குண்டர்களுக்கு எதிராக தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் கடுமையாக தீர்ப்பளித்திருந்த நிலையிலும் கூட இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆல்வரில் முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அவரின் ட்விட்டர் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், உண்மைக்கு ஆதரவாக இருக்காமல், வகுப்புவாத வன்முறைகள் பல இடங்களில் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். பசுவை கடத்திச் செல்கிறார் என நினைத்து ஆல்வார் அருகே ஒரு முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் அடித்துக்கொலை செய்துள்ளது. ஆனால், பாஜகவினரோ அப்பாவிகளை அடித்துக்கொல்லும் நிகழ்வுகள் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். இதைப் பார்க்கும் போது, ஒரு முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பு என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தி பிரிண்ட் எனும் தளத்தில் சசி தரூர் பசுகுண்டர்களால் நடத்தப்படும்வன்முறை குறித்துக் கட்டுரை எழுதியுள்ளார். அதையும் தனது ட்விட்டர்பக்கத்தில் இணைத்துள்ளார். அதில் கடந்த 8 ஆண்டுகளில் பசு தொடர்பான வன்முறைகளால் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 98 சதவீத வழக்குகள் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் பதிவு செய்யப்பட்டவை, பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்தவையாகும். இந்தத் தாக்குதலில் 136 பேர் தாக்கப்பட்டுள்ளனர், 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளிவிவரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x