Last Updated : 22 Jul, 2018 07:19 PM

 

Published : 22 Jul 2018 07:19 PM
Last Updated : 22 Jul 2018 07:19 PM

தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராகுல் காந்திக்கு அதிகாரம்: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு

2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலின்போது, தங்களுடன் ஒத்த சிந்தனையுள்ள கட்சிகளுடன் தேரலுக்கு முன் மற்றும் தேர்தலுக்கு பின் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கி, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், பல்வேறு மாநில தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கவும், அதற்கான குழுவை உருவாக்கவும், மகா கூட்டணி அமைக்கவும் ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, விரைவி்ல தேர்தல் பிரச்சாரக் குழுவை உருவாக்குவார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ம் தேதி புதிதாக அமைக்கப்பட்ட 51 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழுக் கூட்டம் இன்றுடெல்லியில் நடந்தது.

அதில் 23 செயற்குழு உறுப்பினர்கள், 19 நிரந்தர உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேர் என மொத்தம் 51 பேர் இடம் பெற்றனர். இந்த புதிய செயற்குழுவின் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 40 தலைவர்களுக்கும் மேல் பேசினர். அனைவரும், பாஜவுக்கு எதிராக முக்கிய பணியை தேர்தல் நேரத்தில் செய்யவேண்டும் என வலியுறுத்தினார்கள்.

மேலும், சிலர் காங்கிரஸ் தலைமையில் அமையும் எதிர்க்கட்சிக்கு ராகுல் காந்தி தலைமை வகித்து வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சி எவ்வாறு பலம் பெற வேண்டும், பல்வேறு மாநிலங்களில் எந்தெந்த கட்சிகளின் உதவியுடன் கூட்டணி வைத்து பலத்தை பெருக்க வேண்டும். 12 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கிறது, கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் அடுத்த தேர்தலில் மிகப்பெரிய கூட்டணியை அமைக்க முடியும் என்று மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் விரிவாக விளக்கினார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், சீரமைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழு நிகழ்கால, நடப்புகால, எதிர்காலத்துக்கான பாலமாக செயல்பட வேண்டும், நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராட வேண்டும். இந்த புதிய செயற்குழுக்கூட்டம் என்பது அனுபவம் வாய்ந்த தலைவர்களையும், உத்வேகம் வாய்ந்த தலைவர்களையும் கலவையாகக் கொண்டது என்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், நாங்கள் முழுமையாக ராகுல் காந்திக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதிதருகிறேன். நாட்டின் சமூக கட்டமைப்பைக் காப்பாற்றவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் அவர் மேற்கொள்ள இருக்கும் மிகப்பெரிய பணிக்கு ஆதரவு அளிப்போம். சுயபெருமை மற்றும் வாய்ஜாலம் பேசும் தலைவர்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டும். அதுபோன்ற பேச்சுகள் ஒருபோதும் வளர்ச்சிக்குப் பயன்படாது என்று பிரதமர் மோடியை மறைமுகமாகச் சாடினார்.

விவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக வேண்டுமென்றால், ஆண்டுக்கு 14 விழுக்காடு வேளாண்துறை வளர்ச்சி பெற வேண்டும் எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x