Last Updated : 20 Jul, 2018 09:30 PM

 

Published : 20 Jul 2018 09:30 PM
Last Updated : 20 Jul 2018 09:30 PM

கண்ணடித்த விவகாரம்; ப்ரியா வாரியருடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல்

மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியைக் கட்டிப்படித்த நிகழ்வும், அதன்பின் அவர் இருக்கையில் அமர்ந்தபோது, கண் சிமிட்டிய நிகழ்வும் ட்விட்டரிலும், சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

ஒருசிலர் 'அடார் லவ்' திரைப்படத்தின் நாயகி ப்ரியா பிரகாஷ் வாரியர் கண்சிமிட்டும் படத்தையும், ராகுல் காந்தி கண்சிமிட்டும் படத்தையும் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுக் கிண்டல் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் இந்தியில் வெளியான 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' (தமிழில் வசூல்ராஜா எம்பிபிஎஸ்) படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் காட்சியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டு விவாதம் நடந்தது. அப்போது, பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னைச் சிறுபிள்ளை எனப் பிரதமர் நினைத்தாலும், நான் அவரை வெறுக்கவில்லை என்று கூறிவிட்டு, பிரதமர் இருக்கைக்குச் சென்று அவரை கட்டித்தழுவிக் கொண்டார்.

ராகுல் காந்தியின் இந்தச் செயலை பாஜகவினரும், காங்கிரஸ் எம்.பி.க்களும், பிரதமர் மோடிகூட எதிர்பார்த்திருக்கமாட்டார். ஆனால், ராகுல் காந்தியின் இந்தச் செயல் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அதிகமாகப் பகிரப்பட்டு விவாதிக்கும் பொருளாகவும், கிண்டல் செய்யும் விஷயமாகவும் மாறிவிட்டது.

மேலும், இதுதொடர்பாக பல ஹேஷ்டேக்குகளையும் ட்விட்டரில் உருவாக்கி மிகவும் பிரபலமாக்கிவிட்டனர். “பப்புகிஜாப்பி”, “பூகாம்பாகயா”, “ஹக்பளோமஸி”, “முன்னாபாய்” என ஏராளமான ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டுப் பிரபலமாகின.

துஷார் என்ற ட்விட்டர் பயன்பாட்டாளர் கூறுகையில், ''நாடாளுமன்றத்தையே ராகுல் காந்தி தனது செயலால் வென்றுவிட்டார். மக்களவையில் அரசியலை மீறிய மாற்றம் நடந்துள்ளது'' என்று தெரிவித்தார்.

மற்றொரு பயனாளர் கூறுகையில், ''ராகுல் காந்தியின் கட்டிப்பிடித்தலை மோடி உணர்ந்துவிட்டார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ஹர்சிம்ரத் கவுர் மக்களவை முன்னாபாய் திரைப்படம் நடக்கும் இடமில்லை என்று கூறிவிட்டார்'' எனத் தெரிவித்துள்ளார்.

அங்குர் சிங் என்பவர், கூறுகையில், ''ராகுலின் கட்டிப்பிடி தத்துவம் அருவருப்பாக இருந்தது''என்று கூறியிருந்தார்.

மற்றொருவர் ''பப்பு இன்று முன்னாபாயாக மாறிவிட்டார்'' என்றும், பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ''இன்று அதிகாரபூர்வ கட்டிப்பிடி நாள்'' என்றும் பதிவிட்டுள்ளனர்.

ராகுல் காந்தி தனது இருக்கையில் அமர்ந்தபின் கண்ணடித்ததையும் நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். மலையாளத்தில் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்த மணிகய மலரய பூவே பாடலில் அவர் கண்ணடித்தது மிகவும் பிரபலமானது. அதோடு ராகுல் காந்தியை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்திருந்தனர்.

ப்ரியா வாரியர் கண்ணடித்தது சிறந்ததா, ராகுல் காந்தி கண்ணடித்தது சிறந்ததா என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

ஹரிஸ் சிங்வி என்ற நெட்டிசன், ப்ரியாவிடம் இருந்து, ராகுல் காந்தி கற்றுக்கொண்டாரா என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

ப்ரியா வாரியருக்கு கடும் போட்டியாளராக ராகுல் காந்தி வந்துவிட்டார் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

மக்களவையில் கண்ணடிப்பது சரியானது அல்ல என்று சுமித்ரா மகாஜன் கூறியதால்தான், பாபா ராம்தேவ் அழுகிறாரா என்று ராம்தேவையும் சிலர் வம்புக்கு இழுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x