Last Updated : 20 Jul, 2018 04:36 PM

 

Published : 20 Jul 2018 04:36 PM
Last Updated : 20 Jul 2018 04:36 PM

ஆட்சியை இழந்துவிடுவோம் என்ற மோடி, அமித் ஷாவின் பயம் கோபமாக மாறி இருக்கிறது : ராகுல் காந்தி காட்டம்

ஆட்சியை இழந்துவிடுவோம், அதிகாரம் போய்விடும் என்ற பயத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் இருக்கிறார்கள். இவர்களின் பயம் கோபமாக மாறி இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பேசினார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வந்தது. அது தொடர்பான விவாதம் இன்று காலை முதல் நடந்து வருகிறது.

இதில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு 38 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

''குஜராத் மாநிலத்துக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்து சென்றபின் தான் டோக்லாமில் இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் எந்தவிதமான திட்டமும் இன்றி மோடி சீனாவுக்குச் சென்றார், ஆனால், சீன அதிபரோ சில திட்டங்களுடன் இந்தியாவுக்கு வந்திருந்தார். என்னைப் பொறுத்தவரை மோடி நாட்டின் காவல்காரர் அல்ல, ஆனால், பெரும் நிறுவனங்களின் கூட்டாளிதான் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்கிறார், ஆனால், நிதி அமைச்சரோ பயிர்க் கடன் தள்ளுபடி இல்லை என்கிறார்.

உலக நாடுகளில் பெட்ரோல் விலை சரிந்து வருகிறது. ஆனால், நம்நாட்டில் நிலையே வேறு. இந்தியாவில் மட்டும்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மோடி தனது நண்பர்களின் பைகளில் பணத்தைச் சேமிக்க விலையை உயர்த்தி உதவி வருகிறார்.

நாட்டின் பெண்களின் பாதுகாப்பு மிகவும் மோசமாக இருக்கிறது என்று 'எகனாமிஸ்ட்' ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு நிலையும் சரிந்துள்ளது. இது நாட்டின் தோற்றத்தை உலக அளவில் மாற்றி இருக்கிறது.

அப்பாவி மக்களைத் தாக்கி கொலை செய்தவர்களுக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். ஆனால் அது குறித்து பிரதமர் மோடி வாய் திறந்து கருத்து கூறவில்லை. தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல் தனிநபர் மீதான தாக்குதல் அல்ல, டாக்டர் அம்பேத்கர் மீதான தாக்குதலாகும்.

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள். எங்களைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றியையும், தோல்வியையும் சமமாகவே நடத்துவோம். ஆனால், இவர்களோ தங்களிடம் இருந்து அதிகாரம் இழப்பதை எளிதாக விட்டுவிடமாட்டார்கள். அவர்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். அதிலிருந்து வெளிவர வேண்டும். அந்த அச்சம்தான் நாட்டின் மீது கோபமாக மாறுகிறது.

எனக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் குறித்தும், கடவுள் சிவனின் முக்கியத்துவம் குறித்தும் உணர்த்திய உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். என்னைப் பார்த்து நீங்கள் சிறுபிள்ளை என்று அழைக்கலாம். ஆனால், நான் உங்கள் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை.''

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இந்த வார்த்தை பேசியதும், ராகுல் காந்தி பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் இடத்துக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். பதிலுக்கு பிரதமர் மோடி  அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x