Last Updated : 20 Jul, 2018 04:06 PM

 

Published : 20 Jul 2018 04:06 PM
Last Updated : 20 Jul 2018 04:06 PM

என் கண்ணைப் பார்த்து பேச மறுக்கிறார்; மோடியிடம் உண்மையில்லை: ராகுல் காந்தி விளாசல்

 என் கண்ணைப் பார்த்துப் பேச பிரதமர் மோடி மறுக்கிறார், அவர் என்னைப் பார்த்ததும் ஒருவிதமான பதற்றம் அடைகிறார். பிரதமரிடம் உண்மையில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகக் கூறி மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் கூறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த தெலங்கு தேசம் கட்சி விலகியது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அதை சபாநாயர் ஏற்கவில்லை. ஆனால், இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. சீனிவாஸ் அளித்த நம்பிக்கையில்லாத் தீர்மான மனுவைச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வந்தது. அது தொடர்பான விவாதம் இன்று காலை முதல் நடந்து வருகிறது.

இதில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு 38 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. பாஜக எம்.பி. காலா பேசிய பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதித்தார்.

அப்போது மோடியைக் குறிப்பிடும் நோக்கில் ராகுல் காந்தி பேசியதாவது:

''உங்கள் பேச்சில் இருந்து ஒருவிதமான அச்சத்தையும், வேதனையையும் நான் உணர்ந்கிறேன். 21-ம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதத்துக்குப் பலியானவர் நீங்கள்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த அரசியல் ஆயுதத்துக்குப் பெயர் வெற்றுப்பேச்சு தாக்குதல் (ஜும்லா ஸ்டிரைக்).

உங்களின் (மோடி) வெற்றுப் பேச்சுக்கு இலக்கானவர்கள் விவசாயிகள், இளைஞர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள், மற்றும் இந்தத் தேசத்து பெண்கள்தான். இதற்கு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

வெளிநாட்டில் இந்தியர்கள் சட்டவிரோதமாகப் பதுக்கி இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு அனைவருக்கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனத் தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் கூறினீர்கள், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினீர்கள். ஆனால், 4 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், சீனாவில் 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. ஆனால், இங்குள்ள அரசோ 24 மணிநேரத்தில் 400 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்குகிறது. படித்த பட்டதாரி இளைஞர்களைப் பக்கோடோ விற்கலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு கறுப்புப் பணத்தை ஒழிப்பது குறித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நீங்கள் கொண்டு வந்தீர்கள். நீங்கள் ஏழைகளைப் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் பணத்தை மட்டுமே  வைத்து செலவு செய்கிறார்கள், டெபிட் கார்டோ, கிரெடிட் கார்டோ அவர்களிடம் இல்லை என்பதை உணரவில்லை.

இன்று நாட்டில் வேலையின்மை அளவு அதிகரித்து இருக்கிறது. பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள் என்ன ஆனது?

நீங்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது ஜிஎஸ்டி வரியைக் கடுமையாக எதிர்த்தீர்கள். ஆனால், இப்போது நீங்கள் 5 வகையான ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவந்துள்ளீர்கள். சிறுவியாபாரிகளை நசுக்கும் வகையில் வருமானவரித் துறையை ஏவிவிடுகிறீர்கள்.

பிரதமர் மோடி எப்போதும், வசதிபடைத்தவர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் பேசுகிறார், சிறு வணிகர்களுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை. ஏழை மக்களிடம் இருந்தும், சிறு வர்த்தகர்களிடம் இருந்தும் பணத்தை எடுத்துக் கொள்கிறது மத்திய அரசு.

பிரதமரின் முகம் ஜியோ விளம்பரத்தில் வந்தபோதே, அவர் பணக்காரர்கள் குறித்துத்தான் அக்கறை கொள்வார் எனப் புரிந்து கொண்டேன். இந்த நாட்டின் காவல்காரர் என்று பிரதமர் கூறி வருகிறார். உண்மையில் பிரதமர் மோடி காவல்காரர் அல்ல, பெரு நிறுவனங்களின், பணக்காரர்களின் கூட்டாளி.

ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி இருவரும் உண்மையை இந்தத் தேசத்துக்கு மறைக்கிறார்கள். ஆனால், பிரான்ஸ் அதிபரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுகையில், ரபேல் போர் விமானம் குறித்த எந்தவிதமான ரகதிய ஒப்பந்தமும் இல்லை என்று என்னிடம் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு குறிப்பிட்ட சில கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்களுடன் தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பால்தான் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்கி இருக்கிறார்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவை இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி வழங்கியதா என்பது குறித்து பிரதமர் மோடி இந்த அவையில் விளக்கம் அளிக்க வேண்டும். இந்துஸ்தான ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடமும், கர்நாடக இளைஞர்களிடமும் ஒப்பந்தத்தை எடுத்து ரூ.30 ஆயிரம் கோடி கடன் உள்ள தொழிலதிபருக்கு கொடுத்துவிட்டார் பிரதமர்.

என் கண்களைப் பார்த்து மோடியால் பேச முடியாது. என்னைப் பார்த்தால் ஒருவிதமான அச்சம் இருப்பதால், என் கண்களைப் பார்த்து பேசாமல் செல்கிறார். இதில் இருந்து பிரதமர் மோடி உண்மையானவர் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் யாரைப் பார்த்தும் பயப்படக்கூடாது நீங்கள் பயப்படுகிறீர்கள்.''

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x