Published : 20 Jul 2018 03:52 PM
Last Updated : 20 Jul 2018 03:52 PM

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் மத்திய அரசு: மக்களவையில் அதிமுக புகார்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது, போதிய நிதியுதவி அளிக்க மறுத்து வருகிறது என மக்களவையில் அதிமுக குற்றம்சாட்டியது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் காலை 11:00 மணி முதல் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சி எம்.பி.க்களும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

அதிமுக எம்.பி பி.வேணுகோபல் விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் ‘‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு என்பது தாய் - குழந்தை உறவை போன்றது. குழந்தையின் தேவை என்ன என்பதை அறிந்து தகுந்த நேரத்தில் கொடுப்பவள் தாய். ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களை மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.

நாட்டின் 6வது பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. தனது கடுமையான உழைப்பால் இந்த சாதனையை தமிழகம் செய்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு போதிய நிதியுதவி செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது.

தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் 6066.5 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக எங்கள் முதல்வர் இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளார். எனினும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

கும்பல் தாக்குதல் தற்போது பெரிய சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு வேலையில்லா திண்டாட்டம், வறுமை, போதை மருந்து போன்றவையே முக்கிய காரணம். இது மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று மத்திய அரசு கை கழுவ முடியாது. மாநிலங்களா போதை மருந்து உற்பத்தி செய்கிறன.

வெளிநாடுகளில் இருந்து எல்லை தாண்டியே போதை மருந்து கொண்டு வரப்படுகிறது. எல்லையை கண்காணிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கே உள்ளது. காவிரி ஆணையம் அமைத்த பிரதமருக்கு நன்றி. 2019-ம் ஆண்டு தேர்தல் குறித்து மக்களே முடிவு செய்வார்கள்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x