Last Updated : 20 Jul, 2018 02:52 PM

 

Published : 20 Jul 2018 02:52 PM
Last Updated : 20 Jul 2018 02:52 PM

2ஜி வழக்கில் கனிமொழி சிறைவாசம்: மக்களவையில் சுட்டிக்காட்டிய சுப்ரியா சுலே

 மக்களவையில் நேற்று பொருளாதாரக் குற்றங்கள் மீதான மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரிய சுலே, 2ஜி அலைக்கற்றை வழக்கில் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டதை சுட்டிக் காட்டினார்.

பொருளாதாரக் குற்றங்கள் மீதான புதிய மசோதா நேற்று மக்களவையில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் அறிமுகப்படுத்தினார். இதன் மீதான விவாதத்தில் சுப்ரியா சுலே கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில் ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டம் 49/20-ன்படி வாழ இந்திய குடிகள் அனைவருக்கும் உரிமை உண்டு. இது கிடைக்காமல் பாதிக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய முன் உதாரணமாக தங்கள் அனுமதியுடன் கனிமொழியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவர் மீது 2ஜி அலைக்கற்றை ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதற்காக அவர் ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார். அப்போது அவரது உணர்வுகள் என்ன பாடுபட்டிருக்கும் என எண்ணிப் பாருங்கள். இதை நான் அவருக்கு நெருக்கமாக இருந்து பார்த்து உணர்தேன். இதை ஒரு சிறு உதாரணமாகக் கூறியுள்ளேன். இவரை போல் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஜாமீனும் கிடைக்காமல், கனிமொழியின் குடும்பத்தார் அவரது சிறைவாழ்க்கைக்காக எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள். அதன் பிறகு அவரது குற்றச்சாட்டு தவறானது என விடுதலையானார். இதில் அவர் சிறை சென்றதற்கு யார் பொறுப்பு? இதுபோன்ற சம்பவங்களுக்காக அரசு என்ன செய்யப் போகிறது’’ எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவையில் துணை சபாநாயகரான எம்.தம்பிதுரை அமர்ந்திருந்தார். தொடர்ந்து கனிமொழி அடைந்த பாதிப்பை சுப்ரியா சுலே பலமுறை குறிப்பிட்டு பேசியதை தம்பிதுரை தவிர்க்கும்படி வலியுறுத்தினார். மசோதாவை பற்றி மட்டும் பேசும்படி கூறினார். மகாராஷ்டிர மாநிலம் பாராமதி தொகுதி எம்.பி.யான சுப்ரியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x