Published : 20 Jul 2018 02:48 PM
Last Updated : 20 Jul 2018 02:48 PM

கட்டி அணைத்த ராகுல்: கைகுலுக்கி வாழ்த்து சொன்ன மோடி

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது காரசாரமாகப் பேசிய ராகுல் காந்தி பேச்சை முடித்த பின்னர் பிரதமர் இருக்கும் இடம் சென்று அவரைக் கட்டி அணைத்தார். மோடி சிரித்தபடியே அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆந்திராவுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய தெலுங்கு தேசம் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. 15 ஆண்டுகளுக்குப் பின் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் இது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து முதலில் பேசிய தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா, ''ஆந்திரா பிரிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, 5 கோடி ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு பூர்த்திசெய்யவில்லை'' என்று குற்றம் சாட்டினார்.

பாஜகவினரால் குழந்தை என்ற அர்த்தத்தில் பப்பு என்று அழைக்கப்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சில் அனல் பறந்தது. அவர் பேச்சில் நேரடியாக பிரதமரை குற்றம் சாட்டினார். அப்போது மோடி அவையில் அமர்ந்திருந்தார். அவர் சிரித்தபடியே ராகுல் பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தார்.

ராகுல் காந்தி பேச்சில் பிரதமர் என் கண்ணைப்பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.

 பழங்குடி இன மக்கள், இஸ்லாமியர்கள் இந்தியர்கள் இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர் இந்தியாவில் பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் , பெண்கள், தலித்துகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை சிறிது நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்துசென்று மோடியின் அருகே சென்று அவரைத் திடீரென கட்டி அணைத்தார்.

இதை எதிர்பார்க்காத பிரதமர் திரும்பிச்சென்ற ராகுலையின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து அவர் பேசியதற்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கினார். இருவரின் நாகரிகமிக்க இச்செயலை சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் புன்னகையுடன் பார்த்து ரசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x