Last Updated : 20 Jul, 2018 01:36 PM

 

Published : 20 Jul 2018 01:36 PM
Last Updated : 20 Jul 2018 01:36 PM

தாய்ப்பாசத்துக்கு இணையில்லை: 7 மாதங்கள் சுயநினைவற்று கோமாவில் இருந்த தாயை குணப்படுத்திய பச்சிளம் குழந்தை

7 மாதங்களாகச் சுயநினைவற்று கோமா நிலையில் இருந்த 3 மாத கர்ப்பிணி பெண்ணை, அவருக்குப் பிறந்த பச்சிளம் குழந்தை குணப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம், வழூவூரை சேர்ந்தவர் அனூப். இவரின் மனைவி பெத்தனா(வயது28). இவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்த போது, கடந்த ஜனவரி மாதம் தனதுவீட்டில் திடீரென கீழே விழுந்தார். இதில் பெத்தனாவுக்கு தலையில் பலத்த அடிபட்டது.

அவரைச் சிகிச்சைக்காக உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பெத்னாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில், பெத்தனாவும், அவரின் வயிற்றில் இருந்த குழந்தையும் மருத்துவர்கள் உயிர்பிழைக்க வைத்துவிட்டனர், ஆனால், பெத்தனா கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்.

இதனால், கர்ப்பிணிப் பெண்ணாக பெத்தனா படுத்த படுக்கையாகிவிட்டார். நடைபிணமாக கட்டிலில் படுத்துக்கிடந்த பெத்தனாவை அவரின் கணவர் அனூப் மற்றும் குடும்பத்தார் கவனித்து வந்தனர்.

இந்நிலையில், நாட்கள் செல்லச் செல்ல பெத்தனாவின் பிரசவகாலம் நெருங்கியது. இயல்புநிலையில் இருப்பவருக்குத்தான் இயற்கை முறையில் பிரசவம் செய்ய முடியும், இதுபோன்ற கோமா நிலையில் இருக்கும் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி பெத்தனா சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி நடந்த சிஸேரியனில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்தக் குழந்தை பிறந்த பின்புதான் அனைத்து அதிசயங்களும் நடக்கத் தோன்றின. இந்தக் குழந்தைக்கு எட்வின் எனப் பெயரிட்டனர்.

ஒவ்வொரு முறையும் குழந்தை எட்வின் பசிக்காக அழும்போது, பெத்தனாவிடம் பாலூட்டுவார்கள். அப்போது குழந்தைக்கு பெத்தனா பாலூட்டும் போது, கடந்த 7 மாதங்களாக எந்தவிதமான அசையும், முகத்தில் உணர்ச்சிகளையும் காட்டாத பெத்தனாவுக்கு முகத்தில் மாற்றங்கள் தெரியத்தொடங்கின.

இதைக் கண்டு அவரின் கணவர் அனூப் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றுள்ளார். மேலும் குழந்தை அழும்போதும், பெத்தனாவின் முகத்தில் உணர்ச்சிகள் மாறுவதையும் , கண்களில் நீர் வழிவதையும் கண்டு அனுப் ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளார்.

இது குறித்து அனூப் நிருபர்களிடம் கூறுகையில் “ குழந்தை அழும் போதும், பால் குடிக்கும் போதும் பெத்தனாவின் முகத்தில் உணர்ச்சிகள் மாறுகிறது. பெத்தனா சில நேரம் குழந்தையைப் பார்த்துச் சிரிக்கிறாள், குழந்தை அழுதால், அவர் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.

விரைவில் எனது மனைவி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. என் குழந்தை எனக்குக் கடவுள் கொடுத்த பரிசு. என் மனைவியை குணபடுத்திவிட்டது இந்த குழந்தை” எனக் கண்களில் கண்ணீருடன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த மருத்துவமனையில் அவசரப்பிரிவு மருத்துவர் ஆர் விவேக் கூறுகையில், “குழந்தை எட்வினுக்கு பெத்தனா பாலூட்டும் போது கவனித்தேன், பெத்தனாவின் நரம்பு மண்டலம் வேலை செய்யத் தொடங்கியுள்ளது.

குழந்தை அழும்போதும், சத்தமிடும் போதும், பெத்தனாவின் முகத்தில் மாற்றம் தெரிகிறது. கடந்த ஜனவரி மாதம் பெத்தனாவை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டுவரும்போது உணர்ச்சியற்ற நிலையில் இருந்தார். அவருக்குச் செயற்கை சுவாசம் அளித்து, மிகுந்த போராட்டத்துக்கு பின் பெத்தனாவையும், வயிற்றில் இருந்த அவரின் குழந்தையையும் காப்பாற்றினோம்.

கர்ப்பிணிப் பெண்களை இதுபோன்ற சூழலில் நான் சிகிச்சை அளித்தது இல்லை. இது எனக்கு வித்தியாசமான அனுபவம். தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்தால் பெத்தனா விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x