Last Updated : 20 Jul, 2018 12:32 PM

 

Published : 20 Jul 2018 12:32 PM
Last Updated : 20 Jul 2018 12:32 PM

இனி 5 முறைக்கு மேல் ‘ஃபார்வேர்டு’ செய்ய முடியாது: வதந்திகளைத் தடுக்க ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் கிடுக்கிப்பிடி

போலி செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவதைத் தடுக்க இந்தியாவில் இனி ஒருவர் 5 முறைக்கு மேல் எந்தச் செய்தி, படங்கள், வீடியோக்களையும் மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யாத வகையில் கட்டுப்பாடுகளை கொண்டுவர உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

எந்த ஒரு செய்தி, வீடியோ, படங்களை 5 முறை ஃபார்வேர்டு செய்தவுடன் தானாக ஃபார்வேர்டு செய்யும் வழிமுறை தடுக்கப்பட்டுவிடும். இதுவிரைவில் அமலுக்கு வரவுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் போலிசெய்திகள், வதந்திகள், உண்மைக்கு புறம்பான விஷயங்கள், படங்கள், வீடியோக்கள் தீவிரமாக மக்கள் மத்தியில் பரவுகின்றன. இதனால், பல்வேறு மாநிலங்களில் அப்பாவிகளைக் குழந்தை கடத்துவோர் என தவறான நினைத்தும், பசுப்பாதுகாப்பு என்ற பெயரிலும் அப்பாவிகளையும் அடித்துக்கொல்லும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்தன.

இதையடுத்து, வாட்ஸ்அப் நிறுவனம் போலிச் செய்திகளையும், வதந்திகளையும் கட்டுப்படுத்தும் வகையில், வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் வாட்ஸ்அப் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதி இருந்தது. , 2-வது முறையாகவும் மத்திய தகவல்நுட்பத் துறை அமைச்சகம் வாட்ஸ்அப் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதி இருந்தது.

அதில் போலிச் செய்திகளையும், வதந்திகளையும், மார்பிங் படங்களையும், வீடியோக்களையும் தடுக்கும் வகையில் தொழில்நுட்பங்களையும், வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துங்கள் என்று கடுமையாக கூறி இருந்தது. இந்தக் கடிதத்துக்கு வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் எந்தப் பதிலும் மத்திய அரசுக்கு இதுவரை அனுப்பவில்லை.

இதற்கிடையே வாட்ஸ்அப் நிறுவனம் இன்று தனது இணையதளத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுப்பாடுகள், வதந்திகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் 20 கோடி மக்களுக்கும் அதிகமாக வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 100கோடி மக்களுக்கும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்தான் அதிகமான புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள் உள்ளிட்டவை மக்களுக்குள் பகிர்ந்து ஃபார்வேர்டு செய்யப்படுகின்றன.

இந்த ஃபார்வேர்டு செய்தியால் ஏற்படும் பல்வேறு குழப்பங்களையும் சிக்கல்களையும் தீர்க்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதன்படி ஒருவர் தனது வாட்ஸ்அப் செயலி மூலம் புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள் போன்றவற்றை 5 முறைக்கு மேல் ஃபார்வேர்டு செய்ய முடியாது.

5 முறை முடிந்துவிட்டால், தானாகவே ஃபார்வேர்டு பட்டன் அழிந்துவிடும் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டு, அது சோதனையில் இருக்கிறது. அதை விரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்த இருக்கிறோம்.

நாங்கள் கொண்டுவரும் இந்த மாற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து, மதிப்பிடுவோம். வாட்ஸ்அப் என்பது தனிப்பட்டவர்களுக்கு இடையிலான செயலி என்பதை உறுதி செய்வோம்.

வாட்ஸ்அப் செயலி என்பது தனிப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தாருடன், நண்பர்களுடன் நம்பகமான வகையில் சாட் செய்வதற்கும் பேசிக்கொள்வதற்கும் செய்யப்பட்ட ஒரு செயலியாகும். அதற்காகவே வாட்ஸ்அப்பை உருவாக்கினோம். அதை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகளையும் கொண்டு வந்திருக்கிறோம். அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்.

வாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பையும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாக்க கடமைப்பட்டு இருக்கிறோம். அதற்கான வழிகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இவ்வாறு வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வாட்ஸ்அப்பில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்குரூப்பில் செய்திகளை யார் ஃபார்வேர்டு செய்கிறார்கள், குரூப்பில் பேசிக்கொள்வதைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில் வாட்ஸ்அப் செய்திகளை நம்பி அப்பாவிகளை அடித்துக்கொல்லும் சம்பவங்களுக்குப் பின், பல்வேறு தனியார்அமைப்புகளுடன் இணைந்து வாட்ஸ்அப் நிறுவனம், அதன்பயன்பாட்டாளர்களுக்கு எப்படி வாட்ஸ்அப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வகுப்புகளை எடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x