Last Updated : 20 Jul, 2018 09:06 AM

 

Published : 20 Jul 2018 09:06 AM
Last Updated : 20 Jul 2018 09:06 AM

கேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி

‘‘கேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததால், எந்த சாதகமான பலனும் இல்லை’’ என்று முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி தெரிவித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், 22 பேர் கொண்ட குழுவினருடன் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் மோடியைச் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் கூறியதாவது:

பிரதமரை சந்தித்ததால் எந்தப் பலனும் இல்லை. கேரள மாநிலத்தில் நிலவும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினோம். குறிப்பாக கேரளாவுக்கு உணவு தானியங்கள் ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி கோரினோம். ஆனால், இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

மேலும், நாங்கள் புதன்கிழமை கேரளாவில் இருந்து டெல்லிக்கு கிளம்பும் போது, பாலக்காட்டில் ரயில்பெட்டித் தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டம் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், மத்திய அரசிடம் அதுபோல் எந்த திட்டமும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

கேரளாவில் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய குழுவை அனுப்பி சேத விவரங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப நிவாரண நிதி ஒதுக்கும்படி கோரினோம். அதை ஏற்று மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறினார்.

கோழிக்கோடில் பெரிய விமானங்கள் வந்து செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினோம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, பிரதமர் மோடியிடம் இருந்து சாதகமான பதில்கள் வரவில்லை.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னதாலா கூறும்போது, ‘‘முதல்வர் சொன்னது போல், பிரதமர் மோடியைச் சந்தித்ததால் எந்த பலனும் இல்லை. இது ஒரு ஏமாற்றமான சந்திப்புதான். பிரதமரிடம் இருந்து எதையும் கேரள மாநிலம் எதிர்பார்க்க முடியாது’’ என்றார்.

முதல்வர் பினராயி விஜயனுடன், கேரள காங்கிரஸ் தலைவர் எம்.எம்.ஹாசன், மாநில அமைச்சர்கள் கே.ராமச்சந்திரன், ஜி.சுதாகரன், கேரள பாஜக முன்னாள் தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ், இ.டி.முகமது பஷீர் (ஐயூஎம்எல்), மாநிலங்களவை எம்.பி. ஜோஸ் கே.மாணி (கேரள காங்கிரஸ் - மாணி) உட்பட 22 பேர் பிரதமரைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x