Published : 20 Jul 2018 08:58 AM
Last Updated : 20 Jul 2018 08:58 AM

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்து மக்களவையில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: பாஜக மூத்த தலைவர்கள் நம்பிக்கை

மக்களவையில் பெரும்பான்மை இருப்பதுடன், மேலும் பல கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்துள்ளதால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் என பாஜக மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் 20-ம் தேதி (இன்று) இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவித்தார்.

இதனிடையே இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சியினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுபோல, இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க ஆதரவளிக்குமாறு கூட்டணிக் கட்சிகள் மற்றும் சில அரசியல் கட்சிகளுக்கு பாஜக கோரிக்கை வைத்துள்ளது. அதிமுக, தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு ஆதரவளிக்கும் என பாஜக நம்புகிறது.

மக்களவையில் காலியாக உள்ள சில இடங்களைத் தவிர்த்து, இப்போதைய உறுப்பினர்களின் பலம் 534 ஆக உள்ளது. இதில் தீர்மானத்தை தோற்கடிக்க 268 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், இந்தத் தீர்மானத்தை தோற்கடிப்போம் என பாஜக மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் (273) உள்ளது. கூட்டணிக்கட்சிகளின் ஆதரவையும் சேர்த்தால் எங்களுக்கு 314 உறுப்பினர்களின் (மக்களவை தலைவர் தவிர) ஆதரவு உள்ளது. இதுதவிர எங்கள் கூட்டணியில் இல்லாத சில கட்சிகளும் எங்களுக்கு ஆதரவாக இருப்பதால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும்” என்றார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், பாஜக ஆட்சி சரியில்லை எனக் கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டியதன் உள்நோக்கம் என்ன” என்றார்.

கணக்கில் பின்தங்கிய சோனியா

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றி பெறச் செய்வதற்கு தேவையான உறுப்பினர்கள் பலம் எங்களுக்கு உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறும்போது, “சோனியா காந்தி கணக்கில் பின்தங்கி உள்ளார்” என்றார்.

பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறும்போது, “மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்பதற்கான பலம் பாஜகவுக்கு உள்ளது” என்றார்.

பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு

மத்திய, மகாராஷ்டிர மாநில பாஜக அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஆனாலும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க சிவசேனா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கட்சி வட்டாரத்தினர் கூறும்போது, “எங்கள் கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும். இது தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.

அதேநேரம் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறும்போது, “வாக்கெடுப்பின்போது, எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவின் அடிப்படையில் செயல்படுவோம்” என்றார்.

பிஜேடி புறக்கணிக்க முடிவு

மக்களவையில் 20 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஒடிஸாவின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) வாக்கெடுப்பை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் அது காங்கிரஸுக்கு ஆதரவான நிலைப்பாடாகி விடும். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பிஜேடி கருதுகிறது.

கொறடா உத்தரவு

பாஜக வட்டாரத்தினர் கூறும்போது, “மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அனைத்து பாஜக உறுப்பினர்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து சாப்பிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x