Last Updated : 20 Jul, 2018 08:35 AM

 

Published : 20 Jul 2018 08:35 AM
Last Updated : 20 Jul 2018 08:35 AM

ஹாரங்கி அணையில் முதல்வர் குமாரசாமி சமர்ப்பண பூஜை: த‌மிழகத்துக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி அணைக்கு முதல்வர் குமாரசாமி நேற்று சமர்ப்பண பூஜை செய்தார். கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட‌ அணைகளில் இருந்து த‌மிழகத்துக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில‌த்தில் கடந்த இரு மாதங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து, கடந்த வாரம் காவிரி நீர்ப்பாசன கழகம் 4 அணைகள் நிரம்பியதாக அறி வித்து, தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீருக்கும் அதிகமாக நீரை திறந்துவிட்டது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா குடகு மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி அணைக்கு சமர்ப்பண பூஜை செய்தார். டெல்லியில் இருந்து நேற்று பெங்களூரு திரும்பிய முதல்வர் குமாரசாமி குடகு மாவட்டத்தில் உள்ள மற்றொரு அணையான ஹாரங்கியில் நேற்று சமர்ப்பண பூஜை (பாகினா பூஜை) செய்தார். அவருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், குமார‌சாமியின் மனைவி அனிதா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதையடுத்து, குமாரசாமி மைசூருவில் உள்ள கபினி அணைக்கும், மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கும் இன்று சமர்ப்பண பூஜை நடத்த உள்ளார். இதனால் கிருஷ்ணராஜசாகர் அணை, பிருந்தாவன தோட்டம், நுழைவாயில் உள்ளிட்டவை மின் விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மண்டியா மாவட்டத்தில் 124.80 அடி உயரத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் 124.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 58,719 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், 26,844 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரத்தில் உள்ள‌ ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2,857.78 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 14,456 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், 9,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,922 அடி உயரத்தில் உள்ள ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2,919.28 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 21,279 ஆயிரம் கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால்,24,300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,282.09 அடியாக அதிகரித்துள்ளது.கபினி அணைக்கு வினாடிக்கு 37,311 கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், 35,800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளில் இருந்து மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகளுக்குப்போக, வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு சமர்ப்பண பூஜை நடத்தி முடித்த பிறகு, தமிழகத்துக்கு கூடுதலாக நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x