Last Updated : 17 Jul, 2018 05:52 PM

 

Published : 17 Jul 2018 05:52 PM
Last Updated : 17 Jul 2018 05:52 PM

கேரளாவில் உற்சாகமாகத் தொடங்கியது ‘ராமாயண மாதம்’: சிறப்பு பூஜை, விசேஷ கஞ்சி, ராமாயண வாசிப்பு அமர்க்களப்படும்

கேரள மாநிலத்தில் மலையாள ஆண்டின் கடைசி மாதமான `ராமாயண மாதம்' இன்று தொடங்கியது. கோயில்கள் முதல் வீடுகள் வரை ராமாயணக் கதை படிப்பது இந்த மாதத்தின் சிறப்பு.

கேரள மலையாளக் காலண்டர்படி இன்று ‘கர்கிடகம்’ மாதம் பிறந்தது. இது மலையாள மாதங்களில் கடைசி மாதமாகும். ஆகஸ்ட் மாதத்தில் புத்தாண்டான ஓணம் பிறக்க உள்ளது.

இந்த ‘கர்கிடகம்’ மாதத்தில் மலையாளக் கவிஞர் துஞ்சத் ராமானுஜன் எழுத்தச்சன் எழுதிய ‘ஆத்யத்மா ரமாயண’ கதையை அடுத்த 30 நாட்களுக்கு வயதில் மூத்தவர்கள் படிப்பார்கள்.

இதற்காக மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள கோயில்கள், கலாச்சார அமைப்புகள் சிறப்பு பூஜைகளையும், ராமாயண கதை படிப்பு நிகழ்ச்சியையும் நடத்துவார்கள்.

மலையாள மக்களின் வண்ணமிகு மாதமான ‘ஓணம்’ பிறப்பதற்கு முதல் மாதமாக ‘கர்கிடகம்’ மாதம் இருப்பதால், இதை உற்சாகத்துடன் வரவேற்பர். தமிழகத்தில் ஆடிமாத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவதுபோல், கேரள மாநிலத்திலும் ‘கர்கிடக கஞ்சி’ என்று வழங்குவார்கள். அரிசி, ஆயுர்வேத, மூலிகை மருந்துகள் உள்ளிட்டவை சேர்த்து இது தயாரிக்கப்படும்.

மேலும், கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களில் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகன் ஆகியோருக்கு 4 இடங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இந்த மாதத்தில் அந்த 4 கோயில்களுக்கும் சென்று மக்கள் வழிபாடு நடத்துவார்கள். அது ‘நாலம்பல தரிசனம்’ என்று அழைக்கப்படுகிறது

அதுமட்டுமல்லாமல் கேரள மக்களின் முக்கிய நிகழ்ச்சியான யானைகளுக்கு உணவு வழங்கும் ‘ஆனை ஊட்டு’ நிகழ்ச்சிகளும் இந்த மாதத்தில் நடக்கும். இந்த நிகழ்ச்சி திருச்சூரில் உள்ள வடக்கும்நாதன் கோயிலில் சிறப்பாக நடந்தேறும்.

வடக்கும்நாதன் கோயிலின் தெற்கு கோபுரத்தில் யானைகளை வரிசையாக நிற்கவைத்து சந்தனம், குங்குமம் பூசி அவற்றுக்கு கரும்பு, அரிசி, நெய், தேங்காய், வெல்லம் மற்றும் மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x