Last Updated : 17 Jul, 2018 03:41 PM

 

Published : 17 Jul 2018 03:41 PM
Last Updated : 17 Jul 2018 03:41 PM

புல்லட் ரயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறீர்கள்; விவசாயிகளுக்கு பணமில்லையா?- சிவசேனா கேள்வி

புல்லட் ரயிலுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்யும் மத்திய, மாநில அரசுகளால், விவசாயிகளின் பால் கொள்முதல் விலையை உயர்த்தப் பணமில்லையா என்று சிவசேனா கட்சி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசு பால்கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் எனக் கோரி அந்த மாநில விவசாயிகள், பால் வியாபாரிகள் நீண்டநாட்களாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இன்னும் உயர்த்தப்படவில்லை. இதையடுத்து, நேற்று முதல் மகாராஷ்டிர விவசாயிகள் பாலைத் தரையில் கொட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பால் கொண்டுவரும் லாரிகளும் பல்வேறு மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருளான பால் கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர்.

இது குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் மத்திய அரசையும், மாநில அரசையும் கடுமையாகச் சாடி எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''விவசாயிகள் மாநிலத்தில் நடத்தி வரும் போராட்டத்தை சாதாரணம் என்று கூறி புறந்தள்ளிவிட முடியாது. இந்தப் போராட்டம், விவசாயிகள் தலைவர் ராஜு சேத்தியால் தொடங்கப்பட்டது. விவசாயிகள் என்பவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும், சாதியையும், மொழியையும், அரசியல் கட்சியையும் சாராதவர்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பிரதமர் மோடி வெற்றி பெற வாக்களித்தவர்கள்.

கடந்த ஆண்டு இதேபோல விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும், கோரிக்கையையும் மாநில அரசு அவமானப்படுத்திவிட்டது. ஆனால், இப்போது, நடந்து வரும் போராட்டத்தை நசுக்குவதற்குப் பதிலாக, மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கை என்ன என்பதைக் கேட்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆனால் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசோ ஒரு கையால் போராட்டத்தை அடக்குவதற்கு முயற்சித்து, மற்றொரு கையால், விவசாயிகள் வாழ்க என்று ஆதரவாகக் கோஷமிட்டு கரம் நீட்டுகிறது.

பால் லிட்டர் ரூ.27 என விலை நிர்ணயம் செய்யப்பட்ட பின்பும் விவசாயிகளிடம் இருந்து லிட்டர் ரூ.16 முதல் 18 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கோவா, கர்நாடக மாநிலத்தில் பால்வியாபாரிகளுக்கு லிட்டருக்குரூ.5 தள்ளுபடி தரப்படுகிறது. அதேபோன்ற மானியம் மகாராஷ்டிரா விவசாயிகளுக்கும் வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது.

புல்லட் ரயிலுக்கும், சம்ருதி காரிடருக்கும், மெட்ரோ ரயில் பாதைக்கும் மாநிலஅ ரசும், மத்திய அரசும் கோடிக்கணக்கில் செலவு செய்கிறீர்கள். ஆனால், விவசாயிகளுக்குக் கொடுக்கப் பணம் இல்லையா?

புல்லட் ரயிலுக்குக் கடன் கூட வாங்குவேன், ஆனால், கொள்முதல்விலையை ரூ.5 உயர்த்த மாட்டேன் என்று பிடிவாதமாக அரசு இருக்கிறது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலையை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். ஆனால், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பிரதமர் வாக்குறுதிப்படி நடந்து, விவசாயிகளுக்கு அந்தப் பலன்களை அளிப்பாரா? அளிக்கமாட்டாரா?

மோடி பிரதமர் பதவிக்கு வருவதற்கு வாக்களித்த விவசாயிகள் என்று வறுமையிலும், வேதனையிலும் இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த பாந்த்ரா கோண்டியா மக்களவைத் தொகுதி தேர்தலில், பாஜகவை விவசாயிகள்தான் தோற்கடித்தனர். அதேசமயம், பால்கர் தொகுதியில் பாஜகவின் வெற்றி அர்த்தமில்லாதது.

மாநில அரசு ஏன் இப்படிப் பிடிவாதம் செய்கிறது. மக்களின் விருப்பத்துக்கு மாறாக, நானார் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதுதான் விவசாயிகளுக்கு நீதி வழங்கும் முறையா?''

இவ்வாறு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x