Published : 17 Jul 2018 01:24 PM
Last Updated : 17 Jul 2018 01:24 PM

ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி: மத்திய அரசு புதிய திட்டம்

ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது. இதன்படி மத்திய அரசு தேசிய இளைஞர் அதிகாரமளித்தல்( என்-ஓய்இஎஸ்)திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு ஒழுக்கத்தையும், தேசப்பற்றையும், உத்வேகத்தையும் அதிகப்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி இருக்கும்.

இந்தத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையும் அளிக்கப்படும். 12 மாதங்கள் பயிற்சிக்குப்பின், இளைஞர்கள் படிப்பைத் தொடரலாம். அல்லது தகுதி இருந்தால், ராணுவம், துணை ராணுவப்படை, போலீஸ் துறை ஆகியவற்றில் சேரலாம்.

இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் இறுதியில் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் மத்திய இளைஞர் விவகாரம், மனித வளத்துறை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள், மத்திய அரசின் புதிய என்-எஸ் திட்டத்தில்பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலாக ஏற்கெனவே இருக்கும் என்சிசி அமைப்பான தேசிய மாணவர் படையை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளலாம் எனத் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், மத்திய அரசு முன்மொழிந்த தேசிய இளைஞர் அதிகாரமளித்தல் திட்டத்தில் ஒழுக்கம், தேசப்பற்று, சுயமரியாதை ஆகியவற்றை கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் கற்றுக்கொடுப்பது பிரதானமாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்குப் பேரிடர் மேலாண்மை பயிற்சி, தகவல் தொழில்நுட்ப பயிற்சி, ஆயுர்வேதா, யோகா, பழங்கால இந்தியாவின் தத்துவம் ஆகியவை கற்றுக்கொடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x