Published : 17 Jul 2018 10:44 AM
Last Updated : 17 Jul 2018 10:44 AM

‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு: மத்திய அரசு உத்தரவு

அன்னை தெரசா அறக்கட்டளை நடத்தி வரும் ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ அமைப்பின் குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு நடத்த மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நிர்மல் இருதய விடுதி என்ற பெயரில் ஆதரவற்றோருக்கான காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. அன்னை தெரசா ஏற்படுத்திய ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ அமைப்பின் கீழ் இந்தக் காப்பகம் இயங்கி வருகிறது.

இங்கு, பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்ததாக காப்பகத்தின் பொறுப்பாளர் கன்னியாஸ்திரி கொன்சாலியா, கடைநிலை ஊழியர் அனிமா இந்துவார் ஆகிய இருவரை ஜார்க்கண்ட் போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர்.

கன்னியாஸ்திரி கொன்சாலியா வாக்குமூலம் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 50 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஆண் குரலுக்கு கன்னியாஸ்திரி பதில் அளிக்கிறார். அப்போது அவர் 3 குழந்தைகளை விற்றதாகவும் ஒரு குழந்தையை இலவசமாக தத்து கொடுத்ததாகவும் கூறினார்.

கொன்சாலியாவை மிரட்டி போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளதாக இந்திய கத்தோலிக்க பிஷப் அமைப்பு (சிபிசிஐ) குற்றம் சாட்டியது. இந்நிலையில் மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ அமைப்புக்கு சொந்தமாக நாடுமுழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் சோதனை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி அந்த மாநிலங்களில் செயல்படும் குழந்தைகள் காப்பகங்கள் உரியமுறையில் செயல்படுகிறதா என்பதை ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் மேனகா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x