Published : 10 Jul 2018 08:32 PM
Last Updated : 10 Jul 2018 08:32 PM

கச்சா எண்ணெய் இறக்குமதியில் எங்களை கழற்றி விட்டால் சிறப்புச் சலுகைகளை இழக்க நேரிடும்: இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு ஈரானுக்குப் பதிலாக கச்சா இறக்குமதியில் சவுதி அரேபியா, ரஷ்யா, இராக், அமெரிக்கா என்று இந்தியா சென்றால் இந்தியாவுக்கென்றே நாங்கள் அளிக்கும் சிறப்புச் சலுகைகள், முன்னுரிமைகளை இழக்க வேண்டி வரும் என்று ஈரான் இந்தியாவை எச்சரித்துள்ளது.

இதனை புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரக அதிகாரி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்ற, அனைத்திந்திய சிறுபான்மையினர் முன்னணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈரான் தூதரக அதிகாரி மசூத் ரெஸ்வானியன் ரஹாகி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எரிசக்தி மற்றும் ராஜீய விவகாரங்களில் இந்தியாவுக்காக எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். ஆனால் சாபஹார் துறைமுகத்தில் முதலீட்டுக்கான வாக்குறுதிகளை இந்தியா காப்பாற்றவில்லை.

“2012-2015 அமெரிக்க பொருளாதாரத் தடைக் காலக்கட்டத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் சப்ளையை ஈரான் பார்த்துக் கொண்டது. இப்போது ஈரானைக் கழற்றி விட்டு வேறு இறக்குமதி நாடுகளை அணுகினால் டாலர் தொகையில் இறக்குமதி செய்ய நேரிடும் இதனால் செலவு அதிகரிக்கும் மேலும் ஈரான் கொடுத்து வந்த பிற சிறப்புரிமைகள், சலுகைகளையும் இந்தியா இழக்க நேரிடும்” என்றார் ரஹாகி.

ஈரானிடமிருந்து கச்சா இறக்குமதியை கடுமையாகக் குறைக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுக்கு அறிவுறுத்தியதையடுத்து ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஆனால் இந்தியா இது குறித்து எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை, “அனைத்துக் காரண காரியங்களையும் பரிசீலிப்போம்” என்றுதான் கூறி வருகிறது.

அவர் மேலும் கூறும்போது, “ஈரானும், சிரியாவும் பயங்கரவாதத்துக்கு எதிராக வெற்றி பெற்று வருகின்றன. இந்தச் சக்திகள்தான் இப்போது ஆப்கான் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன, ஆகவே ஆசியப் பிராந்திய நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x