Last Updated : 10 Jul, 2018 08:39 PM

 

Published : 10 Jul 2018 08:39 PM
Last Updated : 10 Jul 2018 08:39 PM

‘குப்பையில் புதைகிறது டெல்லி, மும்பை மூழ்குகிறது, அரசு ஒன்றும் செய்யவில்லை’- மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்

குப்பைகளுக்குக் கீழே டெல்லி புதைந்து வருகிறது, தண்ணீரில் மும்பை மூழ்கி வருகிறது. ஆனால், மத்திய அரசும், மாநில அரசுகளும் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாகச் சாடியது.

திடக்கழிவு மேலாண்மையைச் செயல்படுத்தாத, அதற்கான கொள்கையை வகுக்காத 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்

கடந்த 2015-ம் ஆண்டு டெல்லியில் மலேரியா காய்ச்சலில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து இதை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கான கொள்கையை வகுக்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு, ஏப்ரல் 8-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இதுவரை பலமுறை வாய்ப்பளித்தும் பெரும்பாலான மாநிலங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான கொள்கைகள் வகுக்கப்படவில்லை.

நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்த உச்ச நீதிமன்றம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான கொள்கைகள், வரவை அறிக்கையைத் தாக்கல் செய்யாத மாநிலங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசையும், மாநில அரசையும் நீதிபதிகள் கேள்விகளால் விளாசிவிட்டனர். நீதிபதிகள் கூறியதாவது:

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் இந்த நீதிமன்றம் உதவி செய்யமுடியாமல் தவிக்கிறது. ஆனால், டெல்லியில் முதல்வரும், துணை நிலை ஆளுநரும் அதிகாரப்போட்டி நடத்துகிறார்கள். டெல்லியில் ஓக்லா, பால்ஸ்வா, காஜிப்பூர் ஆகிய 3 இடங்களிலும் மலைபோல் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு யார் பொறுப்பு என்பதை நாளைக்குள் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

டெல்லியைப் பார்த்தால், குப்பைகளுக்குக் கீழ் புதைந்து வருகிறது, அங்கே மும்பையைப் பார்த்தால், மழை நீருக்குள் மூழ்கி வருகிறது. ஆனால்,இதுவரை மத்திய அரசும், மாநில அரசும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் நீதிமன்றம் தலையிட்டு ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், நீதிமன்றம் ஆட்சி செய்ய முயல்கிறது என்று எங்கள் மீது வார்த்தைகளால் தாக்குகிறீர்கள். நாங்கள் நீதிமன்றத்தின் அதிகாரம் குறித்தும், அளவு குறித்துபலமுறை உங்களுக்குப் பாடம் நடத்திவிட்டோம்.

13 மாநிலங்கள், பல யூனியன் பிரதேசங்கள் இன்னும் திடக்கழிவு மேலாண்மை குறித்த கொள்கைகளை வகுக்கவில்லை. பிஹார், சத்தீஸ்கர், கோவா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, மேகாலயா, பஞ்சாப், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவை இதுவரை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை. இந்த மாநிலங்கள் அனைத்துக்கும் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கிறோம். விசாரணைக்கு ஆஜராகாத மற்ற மாநிலங்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கிறோம்.

சட்டத்துக்கு உட்பட்டு நடக்க, நாங்கள் இந்த மாநிலங்களுக்கு இறுதிவாய்ப்பு அளிக்கிறோம். இதை மதிக்காவிட்டால், நாங்கள் இந்த மாநில தலைமைச் செயலாளர்களை வரவழைத்து விளக்கம் கேட்டு, ஏன் இந்திய அரசின் சட்டத்தை அமல்படுத்த மறுக்கிறீர்கள் என்று கேட்போம்.

இந்த மாநில அரசுகள் நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களுக்கும்கட்டுப்படவி்லலை, நீதிமன்ற உத்தரவுகளுக்கும் பணியவில்லை. திட்டக்கழிவு மேலாண்மை நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவரும் நிலையில், அதை சரியாகக் கையாள வேண்டியது கடமையாகும் என நீதிபதிகள் கடுமையாகப் பேசினார்.

மேலும், மத்திய அரசு ஏன் இந்த விவகாரங்களில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது. இவை அனைத்துக்கும் யார் பொறுப்பு, என்ன நடந்துவருகிறது. நாங்கள் போட்ட உத்தரவுகளைக் கூட யாரும் பின்பற்றுவதில்லை எனக் கூடுதல் சொலிசி்ட்டர் ஜெனரல் நட்கர்னிக்கு கண்டனம் தெரிவித்து வழக்கை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x