Last Updated : 10 Jul, 2018 05:31 PM

 

Published : 10 Jul 2018 05:31 PM
Last Updated : 10 Jul 2018 05:31 PM

‘பலாத்காரங்களைக் கட்டுப்படுத்தாமல், எப்படி ராம ராஜ்ஜியத்தை அமைப்பீர்கள்’: பாஜகவை விளாசிய சிவசேனா

நாட்டில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்களைக் கட்டுப்படுத்தாமலும், சட்டம் ஒழுங்கை முறைப்படுத்தாமலும் பாஜக எப்படி ராம ராஜ்ஜியத்தை அமைக்கப்போகிறது என்று சிவசேனா கட்சி கடுமையாக விளாசியுள்ளது.

சமீபத்தில் உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், கடவுள் ராமரே வந்தாலும் பலாத்காரத்தை ஒழிக்க முடியாது. பலாத்கார சம்பவங்கள் மாசுமாதிரி ஆகிவிட்ட நிலையில், அதில் பாதிக்கப்படாமல் யாரும் வரமுடியாது எனத் தெரிவித்திருந்தார்.

இதைக் குறிப்பிட்டு சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் பாஜகவைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக பெண்களின் பாதுகாப்புக்காக கடுமையாகப் போராடியது, பேசியது. ஆனால், 2014-ம் ஆண்டுக்குப் பின் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேறு நிலைப்பாடு எடுத்துவிட்டது. பெண்களுக்கு எதிரான பலாத்காரங்கள் குறைந்தபாடில்லை. கட்டுப்படுத்தவும் இல்லை.

பாஜகவினர் நாட்டில் ராம ராஜ்ஜியத்தை கொண்டுவரப்போவதாகப் பேசுகிறார்கள். பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ராம ராஜ்ஜியம் எப்படி கொண்டு வருவார்கள், அவர்களின் திட்டம் என்ன என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பலாத்காரங்களும், பாலியல் ரீதியான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.

அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி இடத்தில் இருக்கும் பாஜகவினர், கடவுள் ராமர் வந்தால் கூட பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது என்று பேசி வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் தலைமையில் பெரும்பான்மை ஆட்சி அமைந்தும் கூட, இந்த நாட்டில் ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்த முடியவில்லை.

தொடர்ந்து பலாத்காரங்கள் நடப்பது என்பது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல. நிர்பயா பலாத்காரத்தின் போது கடின நிலைப்பாடு எடுத்த பாஜக, இப்போது ஆட்சிக்கு வந்தபோதிலும்கூட பலாத்கார சம்பவங்கள் குறைக்க முடியவில்லை.

நல்ல காலம் வரும் என்று பிரதமர் மோடி கூட்டங்களில் பேசினார். பணவீக்கம் குறையும், கறுப்புப்பணத்தை மீட்போம் என்றெல்லாம் கூறினார். ஆனால், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

இதே வாக்குறுதிகளை மீண்டும் கூறி மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிப்பதுதான் சாணக்கிய நீதியா. பிரதமர் மோடி தான் அளித்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றப்போகிறார்.

எல்லாவற்றையும் பணத்தால் வாங்கிவிட முடியாது. பெண்களின் பாதுகாப்பு குறித்த விஷயத்தை எளிதாக எடுத்துக்கொள்ளவும் கூடாது.

அதேபோல, தேன் தடவிய வார்த்தைகள் பேசுவதால் மட்டும் வேலையின்மை குறைந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகிவிடாது.

சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பெரிதாக்கி, கலவரமாக்குவது ராமராஜ்ஜியத்தில் கிடையாது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுபோன்ற மோசமான அரசியலை ஒருபோதும் ராமராஜ்ஜியத்தில் கூறவில்லை. இது உண்மையான சாணக்கிய நீதியும் அல்ல.

இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x