Published : 10 Jul 2018 11:10 AM
Last Updated : 10 Jul 2018 11:10 AM

மும்பையில் 5 ஆண்டுகளில் இல்லாத கனமழை: ஒருவர் பலி; டப்பாவாலா சேவை நிறுத்தம்

மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், விமான, ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டப்பாவாலாக்களும் தங்கள் சேவையை இன்று ஒரு நாள் நிறுத்தி வைத்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் தெலுங்கானா, ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை அதிகஅளவில் பெய்து வருகிறது. மும்பையில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு நேற்று மும்பையில் கனமழை பெய்துள்ளது. கொலபாவில் 170.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சாந்தகுரூஸில் 122 மி.மீ மழையும், கோட்டையில் 203 மி.மீ மழையும், மரோலில் 172 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கி காலத்தில் இருந்து 1,362.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தில பெய்ய வேண்டிய மழையில் 54 சதவீதம் தற்போது பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மும்பைக்கு குடி நீர் சப்ளை செய்யும் துல்சி ஏரி இன்று காலை முழு கொள்ளவை எட்டியது. இதையடுத்து அந்த ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படகிறது.

மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருவதால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மாணவ, மாணவியர், பணிக்கு செல்லும் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் பெய்து வரும் கனமழையால் அங்கு ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மும்பையில் பணிக்குச் செல்லும் ஊழியர்களின் வீடுகளில் இருந்து சமைத்த உணவை வாங்கி அவர்களின் அலுவலகங்களுக்கு கொண்டு சென்று சேர்த்து வரும் டப்பாவாலாக்களும் கடும் மழை காரணமாக இன்று ஒரு நாள் சேவையை நிறுத்தி வைத்துள்ளனர்.

ஒருவர் பலி

மும்பையில் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர் திறந்து கிடந்த பாதளச்சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து திறந்து கிடக்கும் பாதளாச்சாக்கடைகளை மூடி பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மும்பை மாநகராட்சி ஊழியர்களை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x