Published : 10 Jul 2018 07:34 AM
Last Updated : 10 Jul 2018 07:34 AM

நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை கேரள நடிகர் சங்கத்தில் திலீப் சேர்க்கப்பட மாட்டார்: மோகன்லால் திட்டவட்டம்

நடிகர் திலீப் நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை, மலையாள நடிகர் சங்கத்தில் அவர் சேர்க்கப்பட மாட்டார் என்று மோகன்லால் கூறினார்.

பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். 85 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ சங்கத்தில் சமீபத்தில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டார். இதற்கு, திலீபின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பு (டபிள்யூசிசி) எதிர்ப்பு தெரிவித்தது. ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட சில நடிகைகள் ‘அம்மா’ சங்கத்தில் இருந்தும் விலகினர். திலீப்புக்கு ஆதரவாக இருக்கும் நடிகர் சங்கத்தில் அங்கம் வகிக்க விரும்பவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொச்சியில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ‘அம்மா’ சங்கத்தின் புதிய தலைவர் நடிகர் மோகன்லால் கூறியதாவது:

‘அம்மா’ சங்கத்தில் மீண்டும் திலீப்பை சேர்த்துக் கொள்வதாக கடந்த ஜூன் 24-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. மற்றபடி, நடிகைகளுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது சங்கத்தின் விருப்பம் அல்ல. தவிர, சங்கத்தில் உறுப்பினராக நீடிப்பதை திலீப்பும் விரும்பவில்லை. ஆனாலும், நடிகைகள் சங்கத்துடன் பேச இருக்கிறோம். நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை ‘அம்மா’ சங்கத்தில் திலீப் சேர்க்கப்பட மாட்டார். இவ்வாறு மோகன்லால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x