Last Updated : 09 Jul, 2018 08:26 AM

 

Published : 09 Jul 2018 08:26 AM
Last Updated : 09 Jul 2018 08:26 AM

ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவி மகனுக்கு வாரன்ட்

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் சேவை அமல்படுத்தப்பட்டது. அப்போது ஜிபிஎஸ் வசதியுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்கள் கட்டாயம் என அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் சிகித்சா ஹெல்த் கேர் நிறுவனத்தி்ன் 450 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட்டன. இந்த நிறுவனம் முன்னாள் மத்திய அமைச்சர் (காங்கிரஸ்) வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணாவுக்குச் சொந்தமானது ஆகும். இந்நிறுவனத்தின் இயக்குநராக ரவி கிருஷ்ணா உள்ளார்.

இதுதொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ஜெய்ப்பூர் நகர துணை மேயர் பங்கஜ் ஜோஷி வழக்கு தொடர்ந்தார். முறைகேடாக சிகித்சா ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு டெண்டர் கிடைக்கும்படி செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதன்மூலம் சிகித்சா ஹெல்த் கேர் நிறுவனம் பயன் அடைந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ நீதிமன்றம், தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர்கள் சச்சின் பைலட், ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ரவி கிருஷ்ணா, அப்போதைய ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள், தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் இயக்குநர் துரு மிர்ஸா ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட்டன. பின்னர் 3 ஆண்டுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில்அசோக் கெலாட், சச்சின் பைலட், கார்த்தி சிதம்பரம், துரு மிர்ஸா ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ரவி கிருஷ்ணா, மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்வேதா மங்கள், ஊழியர் அமித் அந்தோணி அலெக்ஸ் உள்ளிட்ட 3 பேருக்கு வாரண்ட் பிறப்பித்துள்ளது. இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 23-க்குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x