Last Updated : 06 Jul, 2018 06:26 PM

 

Published : 06 Jul 2018 06:26 PM
Last Updated : 06 Jul 2018 06:26 PM

இதுவரை கழுத்தை நெறித்தீர்கள்; இனி, கேஜ்ரிவாலை செயல்படவிடுங்கள்- மத்திய அரசைக் கண்டித்த சிவசேனா

 டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான அரசை இதுவரை செயல்படவிடாமல் கழுத்தை நெறித்தீர்கள், இனிமேல், செயல்பட மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மோடி தலைமையிலான மத்திய அரசை சிவசேனா கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது

டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்று தொடரப்பட்ட வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை கடந்த இரு நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உதவியாகவும், ஆலோசனை கூறும் விதமாக மட்டுமே துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும், தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவுகள் எடுக்கக் கூடாது, உத்தரவுகள் பிறப்பிக்கக் கூடாது என உத்தரவிட்டது.

இது குறித்து சிவசேனாக் கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’ வில் இன்று தலையங்கம் எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

''டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகாரப் போர் ஏற்பட்ட வேளையில், பிரதமர் மோடி தலையிட்டு, துணை நிலை ஆளுநரைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால், அவர் செய்ய வேண்டிய பணியை, கடந்த 2 நாட்களுக்கு முன், உச்ச நீதிமன்றம் செய்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆலோசனை கூறுபவராக துணை நிலை ஆளுநர் இருக்கலாம், ஆனால், தடைசெய்பவராக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டித்தது.

துணை நிலை ஆளுநர் ஒரு அரசை நசுக்க முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அந்த அரசு அதன் விருப்பம் போல் செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இனிமேலாவது, டெல்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே நீடித்து வந்த அதிகாரப்போர் முடியும் என நம்புகிறோம் . முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அவரின் பணியைத் தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

தேசிய அரசியல் களத்தில் கேஜ்ரிவாலுக்கும், துணைநிலை ஆளுநர் பைஜாலுக்கும் நடந்த அதிகாரப்போராக இதை நாங்கள் கருதவில்லை. இது டெல்லி முதல்வருக்கும், பிரதமருக்கும் இடையே நடந்த அதிகாரப்போராகவே பார்க்கிறோம்.

துணை நிலை ஆளுநர் எல்லை மீறும்போது அதைக் கட்டுப்படுத்த வேண்டிய பிரதமர் மோடி அதில் தலையிடவில்லை. அவர் செய்ய வேண்டிய பணிகளை உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. அரசில் துணைநிலை ஆளுநரின் தலையீட்டை உச்ச நீதிமன்றம் தடுத்துள்ளது.

மக்களின் மிகப்பெரிய ஆதரவால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆனால், பாஜகவுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

கேஜ்ரிவாலின் செயல்பாட்டில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து, கேஜ்ரிவாலின் அரசு செயல்பட மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்.

டெல்லி துணைநிலை ஆளுநர் அரசியலமைப்புச் சட்டம் தனக்கு வழங்கிய பதவியின் முக்கியத்துவத்தை உணராமல், தன்னுடைய தகுதிக்கும், ராஜ்பவன் மதிப்புக்கும் குறைவாக நடந்து கொள்கிறார்.

அரவிந்த் கேஜ்ரிவால் முறையாகச் செயலாற்றவில்லை, ஊழல்வாதியாக இருக்கிறார் என மத்திய அரசு நினைத்தால், ஆட்சியைக் கலைத்துவிடுங்கள். ஆனால், ஒரு அரசாங்கம் செயல்படவிடாமல் தடுப்பது என்பது அநீதியாகும்.

பாஜகவும், மோடியும் தங்களை எதிர்ப்பவர்களை, எதிர்க்கும் மாநில அரசுகளை விரும்பவில்லை என்றால், எதற்காகத் தேர்தல் நடத்த அனுமதிக்கிறீர்கள்.

டெல்லி அரசுக்கு அலுவலகத்தில் ஒரு சாதாரண பியூனைக் கூட வேலையில் நியமிக்க அதிகாரம் இல்லை, எந்தவிதமான கொள்கை முடிவும் எடுக்க முடியவில்லை, ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம், ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை.

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கழுத்தை நெறிப்பதற்குச் சமம். இதனால்தான், கேஜ்ரிவாலும், அவரின் அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் போராட்டம் நடத்தினார்கள்.

ஆளுநர் மாளிகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதல்வரும், அமைச்சர்களும் போராட்டம் நடத்திய காட்சி என்பது கடந்த 1975-77ம் ஆண்டுகளில் எமர்ஜென்சி காலத்தில் நடந்ததைக் காட்டிலும் மோசமானதாகும்.''

இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x