Last Updated : 06 Jul, 2018 04:39 PM

 

Published : 06 Jul 2018 04:39 PM
Last Updated : 06 Jul 2018 04:39 PM

பயணியை கடத்திச் செல்ல முயன்ற கால் டாக்ஸி ஓட்டுநர் கைது; எச்சரிக்கை அலாரத்தால் தப்பித்த பெண்

பெங்களூருவில் விமான நிலையத்திற்குச் செல்ல இருந்த பெண் பயணியை கடத்திச் செல்ல முற்பட்ட ஓலா வாடகை டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:

சுரேஷ் 28, பெங்களூருவின் மிகவும் பின்தங்கிய பனாஸ்வாடி பகுதியில் வசித்து வருபவர். கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிடுவதற்காக பனாஸ்வாடியிலிருந்து ஒரு பெண் பயணியை தனது டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு வந்தார்.

விமான நிலையம் நெருங்குவதற்கு முன்னுள்ள டோல் கேட் பகுதியை டாக்ஸி நெருங்கிக்கொண்டிருந்தபோது, ஓட்டுநர் திடீரென்று தனது வாகனத்தை ஹைதராபாத் சாலை நோக்கித் திருப்பினார்.

பாதை மாறிச் செல்வதால் சந்தேகமடைந்த பெண் பயணி அவரிடம் வினவியுள்ளார். அப்போது டாக்ஸி ஓட்டுநர் அவரை அவமானப்படுத்தியோடு அமைதியாக இருக்கும்படி மிரட்டியுள்ளார்.

எச்சரிக்கை அலாரம்

வாகனம் டோல் பிளாஸா பகுதியைக் கடந்து செல்லும்போது டாக்ஸியில் இருந்த பெண் சமயோசிதமாக தனது எச்சரிக்கை அலாரத்தின் சத்தத்தை அதிகப்படுத்தினார். இதைக் கவனித்த டோல் பிளாஸா ஊழியர், வண்டியை நிறுத்தி அப்பெண்ணை மீட்டார். டோல் பிளாஸா ஊழியரால் பிடிபட்ட ஓட்டுநர் சுரேஷ் காவலரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலீஸார் அவரை கைது செய்தபோது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. அவர் நிறைய குடித்திருந்ததால் என்ன நடக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் கைது செய்யப்பட்டவரிடம் இன்னும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

ஓலா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து தெரிவிக்கையில், ''எங்கள் நிறுவனத்திலிருந்து அவரது கார் நீக்கப்பட்டுவிட்டது. இச்சம்பவத்தால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். பயணிக்கு தேவையான அனைத்துவிதமான ஆதரவையும் அளிக்கத் தயாராக உள்ளோம். விசாரணையின்போது போலீஸாருக்கு நாங்கள் தொடர்ந்து உதவி செய்து வருகிறோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x