Published : 06 Jul 2018 02:33 PM
Last Updated : 06 Jul 2018 02:33 PM

இந்தியன் ரயில்வேக்கு சபாஷ்: 4.5 மணி நேரத்தில் சுரங்கப்பாதை அமைத்து ரயிலை இயக்கி சாதனை

ஒரு நாள் இரவில் சீனா பொறியாளர்கள் ரயில்பாதை அமைத்தார்கள், பாலத்தை கட்டினார்கள் ஜப்பானியர்கள் என்றெல்லாம் செய்திகளைப் படித்திருக்கிறோம். ஆனால், அவர்களையெல்லாம் மிஞ்சி நிற்கிறார்கள் நமது பொறியாளர்கள்.

மிகவும் பரபரப்பாக இருக்கும் ரயில்பாதையில் 4.5 மணிநேரத்தில் சுரங்கப்பாதை அமைத்து, மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், மீண்டும் ரயிலை இயக்கிக்காட்டி இருக்கிறார்கள்.

ஆந்திரா மாநிலத்தில் கொட்டவல்சா மற்றும் பெந்திருத்தி இடையே செல்லும் இருப்புப் பாதையில், 4.5 மணிநேரத்தில் சுரங்கப்பாதை அமைத்து மீண்டும் ரயிலை இயக்கிக்காட்டியுள்ளது கிழக்கு கடற்கரை ரயில்வே. ரயில்வே இந்தச் செயலை சமூக ஊடகங்களில் மக்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

விசாகப்பட்டிணம் அருகே கொட்டவல்சா மற்றும் பெந்திருத்தி இடையே எண் 484 ரயில்வே இருப்புப்பாதை செல்கிறது. இங்கு நான்கு இருப்புப்பாதை செல்வதால், எப்போதும் ரயில்கள் வந்து செல்லும் பரபரப்பான வழித்தடமாகும். இதனால், இப்பகுதி மக்கள் ரயில்வே இருப்புப்பாதையைக் கடக்க முடியாமல், அவதிப்படுவதும், அடிக்கடி ரயிலில் சிக்கி அடிபட்டு மக்கள் பலியாவதும் தொடர்ந்து வந்தது.

இதையடுத்து இந்தப் பாதையில் சுரங்கப்பாதை அமைக்கக் கடந்த 2017ம் ஆண்டு, ஏப்ரல் 26-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. சுரங்கப்பாதை அமைப்பதற்கான அனைத்துப் பொருட்களும் தயார் செய்யப்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, சுரங்கப்பாதை அமைப்பதற்காக 1.5மீட்டர் அகலம் கொண்ட சிமிண்டில் செய்யப்பட்டபலமான 20 அடுக்குகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு அடுக்கும், 4.65x3.65 மீட்டர் உயரம் கொண்டவையாகும். இந்த 20 அடுக்குகளையும் பயன்படுத்தி 4.5மணிநேரத்தில் சுரங்கப்பாதையை ரயில்வே பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அனைத்து ரயில்களும் சென்றபின், சுரங்கப்பாதை அமைக்க, தொடங்கப்பட்ட பணி அடுத்த சில மணிநேரத்தில் முடிந்து மீண்டும் ரயில் இயக்கப்பட்டதைப் பார்த்து அப்பகுதி மக்கள் வியந்துவிட்டனர்.

இது குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் ‘‘இந்த சுரங்கப்பாதை அமைப்பதற்காக, 16 கனரக மண்அள்ளும் எந்திரங்கள், 3 ராட்சத கிரேன்கள், 5 மிகப்பெரிய டிப்பர் லாரிகள், ஆயிரம் மணல் மூட்டைகள், 4 ஹெவி வெய்ட் ஜாக்கிகள், 300 பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

ரயில்கள் சென்றவுடன் இருப்புப்பாதையின் இருபகுதிகளிலும் இருந்து ராட்சத மண் அள்ளும் எந்திரங்கள் மூலம் மண்ணை அள்ளத் தொடங்கினோம், சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் செல்லும் தண்டவாளத்தை மட்டும் பெயர்த்து எடுத்து தனியாக வைத்துவிட்டோம்.

ராட்சத மண் அள்ளும் எந்திரங்கள் மணலை முழுமையாகத் தோண்டி எடுத்தவுடன், நாங்கள் தயாராக வைத்திருந்த 20 சிமெண்ட் பெட்டிகளையும் வரிசையாக நிறுத்தினோம். ஒவ்வொரு பெட்டியும் 4.65x3.65 மீட்டர் உயரம் கொண்டவையாகும்.

முன்னதாக இந்தப் பெட்டிகளை வைக்கும் முன் ராட்சத இருப்பு பிளேட்டை தரையில் பதித்து, சிமெண்ட் சிலாப்புகளை அடுக்கி ஒழுங்குபடுத்தினோம். மண் அள்ளி முடிக்கச் சரியாக ஒருமணிநேரம் ஆனது.

அதன்பின் தரையை சமன் செய்து, ஒவ்வொரு பெட்டியாக வைத்து, சுரங்கப்பாதைபோல் மாற்றினோம். இதற்கு ஒன்றரை மணிநேரம் செலவானது. அதன்பின் பெட்டிகளை ஒன்றாக இருக்கும் இரும்புபிளேட்டை வைத்து இருக்கமாக்கினோம். மக்கள் நடக்கும் அளவுக்குச் சமன் செய்தவுடன், பிரித்து எடுக்கப்பட்ட தண்டவாளத்தின் ஒருபகுதியை மீண்டும் அதில் பொருத்தி சோதனை ரயிலை இயக்கினோம்.

எந்தவிதமான பிரச்சினை இன்றி ரயில் சென்றதையடுத்து, வழக்கம் போல் ரயிலை இயக்க முடிவு செய்தோம். இந்தப் பணிகள் அனைத்தும் 4.5 மணி நேரத்தில் முடிந்தது. அதன்பின் மக்களும் அந்த சுரங்கப்பாதையை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x