Last Updated : 06 Jul, 2018 08:39 AM

 

Published : 06 Jul 2018 08:39 AM
Last Updated : 06 Jul 2018 08:39 AM

உ.பி. அலகாபாத்தில் நடக்கும் கும்பமேளாவுக்காக மசூதியை இடித்து வழிவிடும் முஸ்லிம்கள்

அலகாபாத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவுக்காக தங்கள் மசூதியின் ஒரு பகுதியை அப்பகுதி முஸ்லிம்களே இடித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் பல நூற்றாண்டுகளாக ஆண்டுதோறும் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில், புனித நீராடலுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்களுக்காக, உத்தரபிரதேச மாநிலத்தை ஆளும் அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய வசதிகளை செய்து தருவது உண்டு.

அந்த வகையில், உத்தரபிரதேச அரசின் கீழ் செயல்படும் அலகாபாத் வளர்ச்சி ஆணையமானது, கும்பமேளாவுக்காக சாலைகளை விரிவுபடுத்தி வருகிறது. இதற்கு தடையாக இருக்கும் கட்டிட உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களாகவே அவற்றை இடிக்கச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே, அலகாபாத் நகரில் ராஜ்ருப்பூர் பகுதியில் ‘மஸ்ஜீத் எ காதிரி’ எனும் பெயரில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியானது, சாலை விரிவாக்கத்துக்கு தடையாக இருந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை மட்டும் இடிக்குமாறு அப்பகுதி முஸ்லிம் மக்களிடம் அலகாபாத் வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இந்தக் கோரிக்கையை மகிழ்வுடன் ஏற்ற முஸ்லிம்கள், அந்த மசூதியின் ஒரு பகுதியை கடந்த மூன்று நாட்களாக தங்கள் சொந்த செலவிலேயே இடித்து வருகின்றனர். மதக் கலவரத்திற்கு பெயர்போன உத்தரபிரதேசத்தில், இந்துக்களுக்காக முஸ்லிம்கள் தங்கள் மசூதியை இடிக்க முன்வந்த சம்பவம், மதநல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ‘மஸ்ஜீத் எ காதிரி’முத்தவல்லியான இர்ஷத் உசைன் கூறியதாவது:

அலகாபாத் கும்பமேளாவுக்காக திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வரும் இந்து சகோதரர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே, மசூதியின் ஒரு பகுதியை இடிப்பது என நாங்கள் முடிவு செய்தோம். இதற்காக, அலகாபாத் வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் எங்களிடம் கோருவதற்கு முன்பாகவே இடிப்பு பணியை தொடங்கிவிட்டோம்.

இவ்வாறு இர்ஷத் உசைன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x