Last Updated : 30 Jun, 2018 04:34 PM

 

Published : 30 Jun 2018 04:34 PM
Last Updated : 30 Jun 2018 04:34 PM

ம.பி. சிறுமி பலாத்காரம்: குழந்தைகளைப் பாதுகாக்க தேசம் ஒன்றுபட வேண்டும்; ராகுல் காந்தி அழைப்பு

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 8வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குழந்தைகளைப் பாதுகாக்க தேசம் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், மாண்டசூர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை 8வயது சிறுமி பள்ளிக்கு வெளியே தனது தந்தைக்காகக் காத்திருந்தபோது, அங்கு வந்த இருவர் அந்தக் குழந்தையை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து, கழுத்தை அறுத்தனர். அதன்பின் சிறுமியை  ஒரு பஸ்ஸில் விட்டுச் சென்றனர். அதன்பின் அந்த சிறுமி மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பலாத்காரம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த இர்பான்(வயது24) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரின் கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர். இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளைப் பலாத்காரம் செய்வோருக்கு அதிகபட்சமாகத் தூக்கு தண்டனைவிதிக்கலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்தியஅரசின் சார்பிலும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:

மாண்டசூர் நகரில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டு, இன்று உயிருக்குப் போராடி வருகிறார். இந்த சிறுமிக்குக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த கொடுரம் என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

நம்முடைய குழந்தைகளைக் காக்க இந்தத் தேசமே ஒன்றுதிரள வேண்டும். பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்தி விரைவாக நீதி பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நடிகை சப்னா ஆஸ்மி கூறுகையில், ‘‘8வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது ரத்தத்தை உறைய வைக்கும் செயலாகும். இந்த உலகில் என்ன நடக்கிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில் ‘‘8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது, மனிதசமூகத்துக்கு வெட்கேடாகும். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆதரவாக இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x