Last Updated : 30 Jun, 2018 08:38 AM

 

Published : 30 Jun 2018 08:38 AM
Last Updated : 30 Jun 2018 08:38 AM

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்: சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டி

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று எம்எல்ஏ டிடிவி தினகரன் கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகலில் சிறை வளாகத்துக்கு வந்த எம்எல்ஏ டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், 18 எம்எல்ஏக்கள் வழக்கு, குடும்பத்துக்குள் நீடிக்கும் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியதாக தெரிகிறது.

சிறையிலிருந்து வெளியே வந்த டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் கூறும்போது, “சசிகலா நலமாக இருக்கிறார். தமிழக அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். நானும் சில தகவல்களை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றேன். 18 எம்எல்ஏக்கள் வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்.

சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் புகழேந்திக்கு கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு அவர் தக்க பதில் தருவார். இவ்வழக்கில் எனக்கு நோட்டீஸ் அனுப்பினாலும் சட்டப்படி எதிர்க்கொள்வேன்” என்றார்.

விசாரணை தேதி மாற்றம்

பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகளை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு சசிகலா ரூ. 2 கோடி கொடுத்ததாக எழுந்த புகாரை கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சசிகலாவின் ஆதரவாளர் புகழேந்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் திடீரென வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வரும் திங்கள்கிழமை ஆஜராகுமாறு புகழேந்திக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x