Last Updated : 29 Jun, 2018 04:20 PM

 

Published : 29 Jun 2018 04:20 PM
Last Updated : 29 Jun 2018 04:20 PM

எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் செய்தித் தொடர்பாளர்களை தேர்வு செய்யும் காங்கிரஸ் கட்சி

கட்சிக்கான செய்தித் தொடர்பாளர்கள் சிறந்தவர்களாக, திறமையானவர்களாக இருக்கும் வகையில், எழுத்துத்தேர்வு வைத்தும், நேர்முகத் தேர்வு வைத்தும் காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கான செய்தித்தொடர்பாளர்கள் இந்த வகையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். வயதான தொண்டர்கள், இளைஞர்கள் என மொத்தம் 70 பேர் எழுத்துத் தேர்வில் பங்கேற்றுத் தேர்வு எழுதினார்கள்.

இவர்களுக்கு நடப்பு விவகாரங்கள், அரசியல், பொதுஅறிவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதனைத் தொடர்ந்து எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வும் நடந்தது.

இந்த கேள்விகளில் மண்டலவாரியாகவும், மாவட்ட வாரியாகவும், தொகுதிவாரியாகவும் கேள்விகள் கேட்டகப்பட்டு இருந்தன. உத்தரப்பிரதேசத்தில் இருந்து எத்தனை மக்களவை எம்பிக்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், உபி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

மேலும், உபியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுத் திட்டங்கள் தோல்வி அடையக் காரணங்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்கள் ஆகியவை கேட்கப்பட்டு இருந்தன.

எழுத்துத் தேர்வில் சிறப்பாகச் செய்தவர்கள் தரம்பிரிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நேர்முகத் தேர்வை அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் பிரியங்கா சதுர்வேதி, ரோஹன் குப்தா, உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ்தலைவர் ராஜ் பப்பர் ஆகியோர் நடத்தினார்கள். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் நாளை வெளியிடப்படுகிறது.

வரும் 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சாரம் செய்வது, பாஜகவினருக்கு பதிலடி கொடுப்பது போன்றவற்றில் திறமையானவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்வு முறையை காங்கிரஸ் கட்சி புகுத்தியுள்ளது.

தேர்வில் பங்கேற்ற 70 உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில் மாநிலத்துக்கு செய்தித்தொடர்பாளர்களாக வேண்டுமென்றால், மாநிலத்தின் சார்பில் நீங்கள் பிரதிநிதியாக இருக்க விரும்பினால், மாநிலம் குறித்து அறிந்திருக்க வேண்டும். அடிப்படை விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

அவ்வாறு திறமையாக இருந்தால்தான் அவர்களைப் பதவியில் அமரவைக்க முடியும். செய்தித்தொடர்பாளர்கள்தான் கட்சியின் முகவரிகள். ஆதலால், அவர்கள் திறமையானவர்களாக, பேச்சுத்திறமை உள்ளவர்களாக, அரசியல்அறிவு மிக்கவர்களாக இருப்பது அவசியமாகும். இதற்கு முன் 22 ச செய்தித்தொடர்பாளர்கள் இருந்தனர். அந்தப் பதவிகள் இன்று குறைக்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார்.

மத்தியப்பிரதேசம், கர்நாடக மாநிலத்துக்கும் இதேபோன்று தேர்வு நடத்தியே செய்தித்தொடர்பாளர்களை நியமிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x