Last Updated : 29 Jun, 2018 02:27 PM

 

Published : 29 Jun 2018 02:27 PM
Last Updated : 29 Jun 2018 02:27 PM

பாஜக ஆட்சியில் அதிக எய்ம்ஸ் மருத்துவமனைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜக தலைமையிலான அரசு வந்தபின்தான் அதிகமான எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான ஒப்புதலும், திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவசர சிகிச்சை மையத்துக்கு விரைவாக நோயாளிகளைக் கொண்டு செல்ல ஒரு கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மேலும், முதியோர்களுக்கான சிறப்பு மையத்துக்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டினார். 300 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையமும் எம்ய்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது அதையும் மோடி தொடங்கிவைத்தார்.

எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மூன்றாவது முறையாக இன்று சந்தித்த பிரதமர் மோடி அவரின் உடல்நலத்தை மருத்துவர்களிடமும், உறவினர்களிடமும் கேட்டறிந்தார்.

அதன்பின் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

‘‘நம்முடைய தேசத்து மக்களுக்கு நல்ல சுகாதாரவசதிகளை, குறைந்த கட்டணத்தில் அளிக்க விரும்புகிறோம். கடந்த 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாமல் இருந்தநிலையில், இப்போதுள்ள பாஜக அரசு அதிகமான எய்ம்ஸ் மருத்துமனைக்கு ஒப்புதல் அளித்துள்ளோம், அறிவித்துள்ளோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் நம்முடைய நாட்டில் சுகாதார வசதிகள் பெருமளவு அதிகரித்துள்ளன. மத்திய அரசின் உதவியின் காரணமாகவும், புதிய கொள்கைகள் மூலமும், நடுத்தர மக்கள், ஏழை மக்கள் கூட சிறப்பான மருத்துசேவையை குறைந்த கட்டணத்தில் பெற முடிகிறது.

அனைத்து மருத்துவமனைகளிலும் நவீன மருத்துவக்கருவிகள் சிகிச்சைக்கு வரும் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்து வருகிறோம். கிராமப்புறங்களில் மருத்துவவசதிகள் கிடைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

புதிய இந்தியாவுக்கான தொடக்கத்தில், மக்களுக்குச் சிறந்த மருத்துவமனைகளும், முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்துவருகிறோம், எங்களுடைய அரசு 58 மாவட்ட மருத்துவமனைகளை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தி இருக்கிறோம்.

வரும் 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்து காசநோயை ஒழிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது’’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x